அறத்துப்பால் பாயிரவியல் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து குறள் 1

 1. அகர முதல

மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள்.   


எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது' என்று நினைத்தது!   


உள்ளிருந்து அவர் மனைவி வாசுகி வந்தார். "என்ன யோசனை கணவரே?" என்றார்.


"மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு நீதி நூல் எழுதலாம் என்று இருக்கிறேன்" என்றார் திருவள்ளுவர்.


"எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும். நம் நாட்டில் நீதி நூல்கள் ஆயிரம் இருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் படிப்பதில்லை."


"அதனால்தான் எளிய செய்யுள் வடிவில் அதுவும் ஒவ்வொரு செய்யுளும் ஒன்றே முக்கால் அடி நீளத்தில் இருக்கும்படி எழுதலாம் என்று நினைக்கிறேன்."


"நல்ல யோசனை. குறுகிய பா என்றால் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்."


"என்ன சொன்னாய்? குறுகிய பா! அருமையான சொற்றொடர். என் நூலுக்குக் குறள் என்றே பெயர் வைத்து விடுகிறேன்."


"திருக்குறள் என்று வையுங்கள். மங்களகரமாக இருக்கும்."


"சரியான பெயர். செய்யுளின் நீளம் குறைவாக இருந்தாலும், அதில் ஆழமான பொருள் இருக்கும்படி அமைக்கப் போகிறேன்."



"அப்படியானால், திருக்குறள் என்பது மிகப் பொருத்தமான பெயர். திருமாலின் வாமன அவதாரத்தை வைணவர்கள் 'திருக்குறளப்பன்' என்று குறிப்பிடுவார்கள். சிறிய உருவமாகத் தோன்றி, மூவுலகையும் அளந்த விஸ்வரூபத்தைக் காட்டியவர் வாமனர். அதுபோல் உங்கள் குறளும் நீளம் குறைவாக இருந்தாலும், தோண்டத் தோண்ட ஆழமான பொருளைத் தரும் புதையலாக அமைய வேண்டும். அது சரி. இந்த நூலை எப்படி அமைக்கப் போகிறீர்கள்?"


"மனித வாழ்வின் கூறுகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டுமென்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கருப் பொருட்கள் பற்றியும் கூற வேண்டும்."


"ஓ! அப்படியானால் உங்கள் நூல் மிக மிக நீளமாக அமைந்து விடுமே!"


"அப்படி இருக்காது. செய்யுட்களைக் குறுகிய நீளத்துக்குள் அமைப்பது போல், மூன்று கருப்பொருட்களையும் சுருக்கமாக விளக்கலாம் என்று இருக்கிறேன்!"


"சுருக்கமாக விளக்குவதா? இது போன்ற முரண்பாடுகளை உங்களால் மட்டும்தான் கையாள முடியும். அது சரி. மூன்று கருப்பொருட்கள் என்கிறீர்களே? மொத்தம் நான்கு இல்லையா?"


"அறம் பொருள் இன்பம், வீடு என்ற நான்கு கருப்பொருட்களில், வீடு என்பது இலக்கு. மற்ற மூன்றும் வீடு என்ற இலக்கை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள். ஒருவன் அற வழி நடந்து, பொருள் ஈட்டி, முறையாக இன்பம் துய்த்தால், வீடு பேறு அவனுக்குக் கிட்டும். வீடு பேற்றைப் பெற வேண்டும் என்பதற்காக அவன் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தை மறைபொருளாகக் கொண்டு, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இந்த நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் போகிறேன்."


"அப்படியானால் நூலை வடிவமைத்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்."


"ஆமாம். என்னென்ன தலைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று சிந்தித்து 133 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இந்த ஓலைச் சுவடியில் குறித்து வைத்திருக்கிறேன்." 


"என்னிடம் சொல்லவேயில்லையே! காமத்துப்பாலை வடிவமைக்கும்போதாவது என் கருத்துக்களைக் கேட்டிருக்கலாம்!"


"இப்படி நீ கோபித்துக் கொள்கிறாயே, இந்த ஊடலைப் பற்றிக் கூட எழுதப் போகிறேன். உன் கருத்தைக் கேட்கவில்லை என்று கோபித்துக் கொள்ளாதே! உன்னிடம் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில்தான் அதிகாரங்களை அமைத்திருக்கிறேன். குறள்களை எழுதும்போது, நிச்சயம் உன் சிந்தனைகள் எனக்குத் தேவைப்படும். காமத்துப்பால் மட்டுமல்ல, மற்ற இரண்டு பால்களைப் பற்றி எழுதும்போது கூட உன் கருத்துக்களைக் கேட்டுக் கொள்வேன்."


"ஊடல் கொண்ட மனைவியை எப்படி அமைதிப் படுத்துவது என்பதை மட்டும் உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!"


"உண்மையாகவே உன் ஆலோசனை எனக்குப் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். முதல் குறளை எழுதுவதற்குக் கூட நீதான் உதவ வேண்டும்."


"அதில் என்ன குழப்பம்? முதல் குறள் கடவுளைப் பற்றித்தானே? எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுவது என்ற குழப்பமா?"


"இல்லை. இந்த நூலின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இடம் பெறப் போகும் பத்து குறள்களும் பொதுவான கடவுளைப் பற்றித்தான் இருக்கும். பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களும் இது தாங்கள் வழிபடும் கடவுளைத்தான் குறிக்கிறது என்று நினைக்கும் விதமாகக் கடவுளின் பொதுவான தன்மைகளைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். ஆனால் முதல் செய்யுளில்தான் ஒரு சிக்கல்."


"என்ன சிக்கல்?"


"பொதுவாகத் தமிழ்க் காப்பியங்கள் உலகு என்ற சொல்லுடன் துவங்குவதுதான் மரபு. உலகு என்று ஆரம்பித்தால் அதை எப்படித் தொடர்வது என்று புரியவில்லை."


"உலகு என்ற வார்த்தை முதல் செய்யுளில் இருந்தால் போதும், முதற் சொல்லாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா?"


"நீ சொல்வது சரிதான். கடவுளையும் உலகையும் தொடர்பு படுத்தி எழுத வேண்டும். எனக்குச் சரியான ஒரு கருத்து கிடைக்கவில்லை."


"நேற்று நான் சென்ற கோவிலில் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு கதை சொன்னார். ஒருமுறை சிவபெருமானிடம் ஒரு மாம்பழம் இருந்ததாம். அதை முழுதாகத் தனக்கே கொடுக்க வேண்டும் என்று விநாயகரும் முருகனும் கேட்டார்களாம். 'உங்கள் இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்' என்றாராம் சிவபெருமான். முருகன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வருவதற்குள், விநாயகர் பெற்றோரை வலம் வந்து முந்திக் கொண்டாராம். பழத்தை விநாயகருக்குக் கொடுத்த சிவபெருமான், பெற்றோர்தான் உலகம் என்று முருகனுக்கு உணர்த்தினாராம்."


"சுவாரசியமான கதை. பெற்றோர்தான் உலகம். அப்படியானால் இவ்வுலகுக்கே பெற்றோர் கடவுள்தான். அவர்தானே ஆதியாக இருந்து இந்த உலகைப் படைத்தவர்? ஆதி பகவன் முதற்றே உலகு! அருமையாக அமைந்து விட்டது. ஆதி பகவன் என்றால் இவ்வுலகம் அமையக் காரணமான இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆதி என்ற பெயரைப் பெண் பெயராகக் கொண்டால், ஆண் பெண் என்று இரு உருவில் அமைந்த கடவுள் என்றும் கொள்ளலாம். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதைக் குறளின் பின்பகுதியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் குறளை எப்படித் துவங்குவது?"


'எழுத்துக்கள் 'அ'வில்தானே துவங்குகின்றன? எனவே உங்கள் முதல் குறளையும் 'அ'விலேயே துவங்குங்கள்."


"அருமையான யோசனை. 'அ' என்றால் அகரம். 'அகர முதல எழுத்தெல்லாம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.' அருமையாக அமைந்து விட்டது. முதல் குறளை நீயே அமைத்துக் கொடுத்து விட்டாய் வாசுகி!" 


"மனைவியின் பெருமை பற்றி எழுதும்போது என் பெருமையை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினால் போதும்!"


அறத்துப்பால்

பாயிரவியல்

அதிகாரம் 1

கடவுள் வாழ்த்து

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


பொருள்:

எழுத்துக்கள் 'அ' விலிருந்து துவங்குகின்றன. அதுபோல் இவ்வுலகு கடவுளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு