பொதுக்காலம் 11 ஞாயிறு விடுதலைப் பயணம் 19 :2-6 திருப்பாடல் 100 உரோமையர் 5 :6 - 11 மத்தேயு 9:36-10:8

 பொதுக்காலம் பதினோராம் ஞாயிறு

 விடுதலைப் பயணம் 19 :2-6

 திருப்பாடல் 100

 உரோமையர் 5 :6 - 11

 மத்தேயு 9:36-10:8


 இறைவனின் கொடையாய்


 கொடை என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு ஆனால் விவிலிய பின்னணியில் கொடை என்ற வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் இல்லாத ஒன்றை இலவசமாக பெறுவதாகும்.


 நாம் ஒவ்வொரு நாளும் பெரும் கொடைகள் எவை?

 ஒளியை கொடையாக பெறுகிறோம், காற்றை கொடையாக பெறுகிறோம், நீரை கொடையாக பெறுகிறோம், நெருப்பிலிருந்து அனலை கொடையாக பெறுகிறோம், வானிலிருந்து மழையை கொடையாக பெறுகிறோம்.


 இவ்வாறு நாம் பலவற்றை கொடையாக பெறுகிறோம்.


 இன்று இறைவாக்கு வழிபாடானது நம்மை இறைவனின் கொடையாக வாழ அழைப்பு விடுக்கிறது.


 1. எதற்காக நாம் இறைவனின் கொடையாக வாழ வேண்டும்?


 நான்கு புள்ளி ஐந்து மில்லியன் ஆண்டு உலக வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

 ஆனால் ஒரு சிலரை மட்டுமே இந்த உலக வரலாறு நினைவு கூறுகிறது.

இந்த உலகை வெல்ல வேண்டும் என்று முயற்சி செய்த அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன் என்று பலரும் முயற்சி செய்து இருந்தாலும், தனது உயிரை பிறருக்காக சிலுவையில் கொடுத்த இயேசு கிறிஸ்து மட்டுமே அதை சாதித்துள்ளார். அதாவது தனது வாழ்வையே இறைவனின் கொடையாக வாழ்ந்து இந்த உலகை வென்றுள்ளார்.


 நாமும் இறைவனின் கொடையாக வாழ்வதற்கு வழி காட்டியுள்ளார். இதையே இன்று இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் உரோமையர்களுக்கு எழுதிய மடலில் கூறுகிறார், நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி அவர் வழியாய் தண்டனை தீர்ப்பில் இருந்து தப்பி மீட்பு பெற்றோம் என உறுதியாக நம்பலாம்.


 ஆக நமது வாழ்வு இறைவனின் கொடையாக இருந்தால் நாமும் இந்த மண்ணில் நிலைத்து நிற்போம்.


 2. யாருக்காக நாம் இறைவனின் கொடையாக இருக்க வேண்டும்.


ஒரு விவசாயி பயிர் வளர்ப்பது, அல்லது ஒரு மீன் பிடி தொழிலாளி மீனைப் பிடிப்பது என்பது அவர்களின் வயிற்று பசியை போக்குவதற்கு மட்டுமல்ல அதையும் கடந்து பிறரின் நல்வாழ்வுகாகவும் தான்.


விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் இன்று நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால் அந்த விவசாயிகளின் நிலைமை இன்று கேள்விக்குறியாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் இருக்கும் இந்தக் காலச் சூழ்நிலையிலும் கூட அவர்களின் ஏழ்மை கடன் பிரச்சினைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைப்பதில்லை. இருந்த போதிலும் அவர்களின் தியாகத்தினால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு நாம் மகிழ்ச்சியாக இருக்க யார் யாரோ துன்பப்படுகிறார்கள் என்பதே உண்மை, அல்லது நாம் மகிழ்ச்சியாக இருக்க யார் யாரோ இறைவனின் கொடையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.


பலர் நமக்காக கடவுளின் கொடையாக இருக்கும் இந்த உலகில் நாம் ஏன் பிறருக்கு கடவுளின் கொடையாக இருக்கக் கூடாது, நாம் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து கொள்வது, பிறரின் நல்வாழ்வுக்காக நாம் உழைப்பது, நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நல்வழியில் நடத்திச் செல்வது என்பதே உண்மை.


 இவர்களையே இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் --- தனது தனிச் சொத்தாக பார்க்கிறார். இன்று நாமும் இறைவனின் தனிச் சொத்தாக மாற வேண்டுமென்றால், பிறருக்காக நாம் நமது வாழ்வை கடவுளின் குடையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


3. எப்படி நாம் இறைவனின் கொடையாக இருக்க வேண்டும்.


நாம் இறைவனின் கொடையாக இருக்க வேண்டும் என்றால் நீதி, அமைதி, மகிழ்ச்சி என்ற முக்கியமான பண்புகளை நமதாக்க வேண்டும்.


நீதி என்பது தவறான வழியில் நம்மை சுற்றி இருப்பவர்கள் செல்லும் பொழுது அவர்களை அன்போடு அரவணைத்து நேர்வழியில் நடத்திச் செல்லும்போது நீதி என்ற பண்பு நமதாகிறது.


அமைதி என்பது மனமுதிர்ச்சியும் பிறரை சரியாக புரிந்து கொள்ளும் தன்மையை பெற்றிருக்கும் பொழுதும் அமைதி என்ற பண்பு நமதாகிறது.


மகிழ்ச்சி என்பது பிற மனிதர்களோடு நாம் கொள்ளும் உறவு வழியாக கடவுளோடு உறவு கொள்வதில் கிடைப்பதே மகிழ்ச்சியாகும்


இவ்வாறு நாம் கடவுளின் கொடையாக மாறுகிறோம் கடவுளின் சீடராக மாறுகிறோம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம்.


இயேசுவின் கொடையாக மாறிய சீடர்கள் வழியாக இன்று திரு அவை உருவானது.


நாம் பெற்றுக் கொண்ட திருமுழுக்கு மற்றும் ஒவ்வொரு நாள் திருப்பலி வழியாக நாமும் கடவுளின் கொடையாக வாழ வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.


இதை நாம் சரியாக செய்தால் நாமும் அறுவடையின் வேலையாட்களாக மாறுவோம், இறைவனின் அன்பு நம்மிலும் நமது அன்பு பிறரிலும் வளரும்போது இறைவன் விரும்பும் அந்த இறையாட்சி இந்த மண்ணில் நிலைபெறும்.


இறைவனின் பெரும் மகிழ்ச்சியை சுவைக்க இறைவனின் கொடையாக வாழ இறையருள் வேண்டுவோம் இறைவனின் ஆசி எந்நாளும் நம்மோடும் இருக்கும்.




 (குட்டி இயேசு)

Comments

Popular posts from this blog