பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி 30 /06/ 2023*
பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி 30 /06/ 2023*
I தொடக்க நூல் 17: 1, 9-10, 15-22
திருப்பாடல் 128: 1-2, 3, 4-5 (4)
II மத்தேயு 8: 1-4.
கடவுளை வெற்றி கொண்டவர்களாய்.
ஒரு ஆசிரியரும் ஒரு மாணவனும், நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு.
மாணவன் : ஏன் சார், கடவுளை நம்மால் வெற்றி கொள்ள முடியுமா?
ஆசிரியர் : கண்டிப்பா முடியுமே.
மாணவன் : அது எப்படி சாத்தியம்!
ஆசிரியர் : நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்ந்தால் எதுவும் சாத்தியம்தான்...
எல்லாம் சரியாகிவிடும் என்பது 'நம்பிக்கை'
எல்லாம் சரி செய்து விடலாம் என்பது 'தன்னம்பிக்கை'
எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது 'வாழ்க்கை'
என்ற ஒரு சிறிய தத்துவத்தை கூறினாராம்.
நம்பிக்கை, தன்னம்பிக்கை, வாழ்க்கை என்று வாழ்க்கை சக்கரத்திலே நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
யாரெல்லாம் இந்த மூன்று நிலைகளிலும் சரியான முறையில் தடுமாறாமல் மேலாண்மை செய்யும் பொழுது அவர்களால் அவர்களது வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் தொழுநோயாளர் நலம் பெறும் நிகழ்வானது, மத்தேயு நற்செய்தியில் வரும் முதல் புதுமையாக உள்ளது. அதாவது மத்தேயு எட்டாம் அதிகாரத்திற்கு முன் வரை இயேசு வெறும் போதனைகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இன்று நாம் வாசிக்க கேட்ட நற்செய்தியிலிருந்து அவரது முதல் புதுமை துவங்குகிறது.
இயேசு கொஞ்சம் சேட்டை பிடித்தவர் தான். இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த மக்கள் கொண்டிருந்த விதிகள் அனைத்தையும் இயேசு தெரிந்தே மீறுகின்றார்.
அதாவது சமாரிய பெண்ணிடம் பேசக்கூடாது என்று அந்த சமூகத்தில் விதிகள் இருந்தது, அதை மீறி அந்த சமாரிய பெண்களிடம் பேசுவது. தொழு நோயாளரை தொடக்கூடாது என்றால் அதை மீறி அவர்களை தொடுவது. பாவிகளோடு உணவருந்துவது. இவ்வாறாக கடவுளின் சட்டம் என்று தங்களுக்குள் தாங்களே வகுத்துக்கொண்டு, அந்த சட்டத்தின் வழியாக மற்றவர்களை அடிமைப்படுத்தும் சட்டங்கள் அனைத்தையும் இயேசு மீறினார்.
ஆக இயேசுவை வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே பார்த்த மக்களின் முன், அவரது செயல்களை தமது நம்பிக்கை மூலம் செயல்பட வைக்கின்றார் இந்த தொழுநோயாளர். மேலும் ஆண்டவருக்கு அஞ்சி நடந்த ஆபிரகாம் தனது முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கின்றார், அந்தக் குழந்தையின் வழியாக கடற்கரை மணலை போல தன் வழி மரபினரை பெருக்கும் ஆசியை இறைவனிடம் பெற்றுக் கொள்கின்றார்.
இவ்வாறு நம்மால் கடவுளை வெல்ல முடியுமா என்று கேட்டால், நாம் அந்த கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்படும் போது எதுவும் சாத்தியப்படும் என்பதையே இன்றைய வாசகங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடும், எல்லாம் சரி செய்து விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு வந்து இறைவன் முன் நின்றார்கள் தொழு நோயாளரும் ஆபிரகாமும் . எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்ற வாழ்க்கையை இறைவன் ஆபிரகாமுக்கும் தொழுநோயாளருக்கும் தந்தார்.
இன்று நமக்கும் தர தயாராக இருக்கின்றார். நாம் அந்தக் கொடைகளை பெற தயாராக இருக்கின்றோமா?
( குட்டி இயேசு )
Comments
Post a Comment