பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

 பொதுக்காலம் 12-ம் ஞாயிறு


 எரேமியா 20:10-13.

 திருப்பாடல் 69

உரோமையர் 5:12-15.

மத்தேயு 10:26-33


அது ஒரு பழமையான கட்டிடம், அங்கு எதிர்பார்க்காத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் போது அனைவரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியில் வந்து விட்டார்கள், ஆனால் ஒரு குழந்தை மட்டும் இரண்டாம் தளத்தில் மாட்டிக்கொண்டது, அந்தக் குழந்தை ஜன்னலோரம் வந்து பார்த்தபொழுது, கீழ்த்தளம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் குழந்தை தனது இறப்பு நெருங்கி விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், கீழிருந்து ஒரு குரல் கேட்டது, கீழே குதித்து விடு உன்னை நான் பிடித்துக் கொள்வேன் என்று அந்தக் குழந்தையின் தந்தை கூறியது, அந்தக் குழந்தைக்கு கேட்டது. ஆனால் கீழே பார்த்தபோது அங்கு நெருப்பு புகைமூட்டம் மட்டுமே கண்களுக்கு தெரிந்தது.u

 குழம்பிப் போயிருந்த குழந்தையிடம் தந்தை மீண்டும் கூறினார், நான் உன்னை பார்த்து விட்டேன் நீ குதி நான் உன்னை பிடித்துக் கொள்வேன், என்று தந்தை கூறியதைக் கேட்டு, அக்குழந்தை மாடியில் இருந்து குதிக்கவே, அக்குழந்தையின் தந்தை அந்த குழந்தையை தனது கையில் பிடித்து காப்பாற்றி விட்டார்.

 இவ்வாறு தன் தந்தையின் மீது கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கை, அன்று அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றியது.

 இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிக்கு அனுப்பும் முன் அவர்களுக்கு கூறிய அறிவுரையின் ஒரு பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

 இந்த நிகழ்வின் பின்னணியில் இன்றைய இறைவாக்கு என்ன நமக்கு சொல்கிறது என்பதை சிந்தித்து பார்ப்போம்.

 கட்டிடம் என்பது நாம் வாழும் இந்த பூமியாகவும், எரியும் தீயையும் புகையையும், அழகையின் சோதனைகளாகவும், கீழ் இருக்கும் தந்தையை இறைவனாகவும், தந்தையின் குரலை இறை வார்த்தையாகவும், கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை நமக்கும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இன்று நாமும் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில், தீயின், புகையின் நடுவில் மாட்டிக் கொண்டு நிற்கின்றோம். நம்மை பார்த்து இறைவன் கூறுகின்றார், மகனே மகளே, நீ இருக்கும் இடத்தை விட்டு என்னிடம் வா என்று அழைக்கிறார், நமது பதில் இருப்பு என்னவாக இருக்கிறது?

 நாம்தான் பாவியாயிற்றே நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வாரா என்ற ஐயம் நம்மில் எழலாம்?

 புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் பிரிவு 5 - 12 முதல் 15 வரை உள்ள இறைவார்த்தையின் பின்னணியில், பாவம் செய்ததால் சாவு நம்மை கவ்விக்கொண்டது என்று கூறும் பவுல், இயேசு கிறிஸ்துவின் வழியாய் மீட்பு பெற்றோம் என்பதை தெளிவுபடுத்துகிறார். அதாவது குற்றத்தன்மை என்பது வேறு அருள் கொடை என்பது வேறு.

ஒருவர் என்னதான் பாவம் செய்திருந்தாலும், மனம் மாறி இறைவனிடம் வர வேண்டும் என்று நினைக்கும் பொழுது இறைவன் அவரது குற்றப் பழிகள் அனைத்தையும் நீக்கி தமது அருள் கொடைகளால் நிறைவு படுத்துவார்.

ஆக இறைவனை நோக்கிய நமது பயணத்தின் முதல் படிநிலை மனம் மாறுதல்.

 எரேமியா 20 : 10 முதல் 13, என்ற இறை வார்த்தையின் பின்னணியில், என்னதான் ஒருவர் நேர்மையான, நீதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட அவர் மீது பழி சுமத்தவும், அவரின் வீழ்ச்சிக்காகவும் அவருடைய நண்பர்கள் கூட காத்திருப்பார்கள் என்று கூறுகிறார் எரேமியா.

 நம் வாழ்விலும் கூட பல நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது, அல்லது ஒரு உயர்வு நிலையை அடையும் பொழுது, நம் மீது பழி சுமத்துவதற்கும் நமது வீழ்ச்சிக்காகவும் பலரும் காத்திருப்பர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நமது வாழ்க்கையை வாழும் பொழுது இடர்களும் கூட இனிமையாகும். ஏனெனில் இறைவன் வரியோராகிய நமது உயிரைத் தீயோரின் பிடியில் நின்று விடுவிக்க வல்லவர். ஆக இறைவனை நோக்கிய நமது பயணத்தின் இரண்டாவது நிலை இறைவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை ஆகும்.

 மத்தேயு 10 : 26 முதல் 33 வரை உள்ள இறை வாக்குப் பின்னணியில், நம் ஒவ்வொருவருக்குமே ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும். நமது வாழ்வில் இறைவனுக்கு சான்று பகர்வது. அந்த வாய்ப்பை எப்பொழுதுமே தவற விடக்கூடாது. அந்த வாய்ப்பை சில நேரங்களில் நாமே உருவாக்கிக் கொண்டாலும் நலம்தான். பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, கைவிடப்பட்டோருக்கு ஆதரவு கொடுப்பது, என்று இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் பலரையும் நாம் கண்ணோக்கி பார்க்கும் பொழுது, மக்கள் முன் நாம் இறைவனுக்கு சான்று பகர்கிறவர்களாக இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு உதவி செய்யும் பொழுது பல இன்னல்களும் இடர்களும், இடையூறுகளும் விமர்சனங்களும் கூட வரும. இந்தச் சூழ்நிலையில்தான் இயேசுவின் சீடராகிய நமக்கு இயேசு கூறும் அறிவுரையாக இன்றைய நற்செய்தி உள்ளது. உடலை மட்டும் கொல்லுவோருக்கு அஞ்ச வேண்டாம். ஆக இறைவனை நோக்கி நமது பயணத்தின் மூன்றாவது படிநிலை அச்சமின்மை மற்றும் இறைவனுக்கு சான்று பகர்வது.

 இவை அனைத்தையும் செய்ய நமக்கு கட்டாயம் ஆற்றல் தேவை. அந்த ஆற்றல் எப்படி நமக்கு கிடைக்கும் என்றால், உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வழியாகவே கிடைக்கும்.

 இறுதியாக இன்றைய பதிலுரை பாடலில் திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல கடவுளின் பேரன்பிற்கேற்ப அவர் நமக்கு பதில் கொடுப்பார், அந்த பதிலை கேட்டவர்களாய் பற்றி எரியும் நெருப்பின் புகையில் குதிப்போம். இறைவன் நம்மை பற்றி பிடித்து பாதுகாப்பார்.


 ( குட்டி இயேசு )

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு