*08 ஜூலை 2023, சனி* *பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி*

 *08 ஜூலை 2023, சனி*


*பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி*


தொடக்க நூல் 27: 1-5, 15-29*

திபா 135: 1-2. 3-4. 5-6.

மத்தேயு 9: 14-17



வெற்றிப்படிக்கட்டுகள்


கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகவே இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 


கனவுகள் குறிக்கோளை இனங்கண்டு அதனை நெறிப்படுத்தவும் கூடும், அவையே சில வேளைகளில் குறிக்கோளை சிதைக்கவும் கூடும்!


வளையற்காரனின் கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது!


ஒருவன் வளையல் வாணிபம் செய்ய முடிவெடுத்து வளையல்களை வாங்கிக் கூடையில் அடுக்கிக்கொண்டு அவற்றை விற்கச் செல்வதற்கு முன் ஒரு கல்லில் அமர்ந்து பகற்கனவு காண ஆரம்பித்தான். 


கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டான், அவை திக்குத் தெரியாமல் ஓடின, அவன் நினைத்தான், “நான் இந்த வளையல்களை விற்றுக் கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு துணி வாணிபம் தொடங்குவேன், அதன் மூலம் இந்த நாட்டிலேயே எனக்கு நிகரான வணிகனோ, பணக்காரனோ இல்லை எனும்படி கோடி கோடியாய் சம்பாதிப்பேன், என்னுடைய வளர்ச்சியைக் கண்டு அரசன் தன் மகளை எனக்கு மணம் முடித்து வைக்க விரும்புவான், முதலில் நான் அவனிடம் முடியாது என்று பிகு பண்ணுவேன், பிறகு அவன் தொல்லை தாங்காமல் அவனது மகளை மணம் முடிப்பேன், அவள் மன்னன் மகள் என்னும் பெருமையுடன் என் பேச்சைக் கேட்காது நடந்துகொள்வாளாயின் இப்படித்தான், “ஒரே மிதியாக மிதித்து அவளை சாகடிப்பேன்” என்று தன் காலைத் தூக்கி தரையில் ஓங்கி மிதித்தான், அது பக்கத்திலிருந்த வளையல் கூடையில் பட்டு வளையல் எல்லாம் சுக்குநூறாகிப் போனது!


இது போன்ற முதலுக்கே மோசம் செய்கின்ற கனவுகளும் நம்மில் சிலருக்கு வருவதுண்டு. அதை விடுத்து குறிக்கோளை அடைய என்ன வழி என்று சிந்திப்பதே சிறந்தது! 


எனினும் சிந்தனை செயல் வடிவம் பெறாவிடின் பயனில்லை. அல்லது அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்று காத்திருந்து காலங்கடத்துவதிலும் பயனில்லை!


“எதிர்பாரா ஆச்சரியங்கள்

பூச்சொரியும் என்றுதான்

வாழ்க்கைச் சுவடுகள்

வாசலைத் தாண்டுகின்றன!”


பெயர் மறந்த புத்தகத்தில் என்றோ படித்தேன். மனதில் பதிந்துவிட்டது.


எதிர்பார்ப்போடுதான் காலம் நகர்கின்றது, இருந்தாலும் இந்த வரிகளை நினைத்துப் பார்க்கும்போழுதெல்லாம் ஏதோ ஒரு நெருடல் என்னுள் எட்டிப் பார்க்கிறது. 


வெறுமனே அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து எம்முடைய செயற்பாடுகளைத் தொடங்க முடியாது. முயற்சியும் தன்னம்பிக்கையும் இலக்கும் குறித்த தெளிவும் இருந்தாலன்றி வெற்றி கிட்டுவதில்லை. 


“இருப்பது பொய், போவது மெய்” என்று இலக்குகள் இன்றி இருப்பதிலோ, அதை அடைவதற்கான முயற்சிகளைத் தள்ளிப்போடுவதிலோ அர்த்தமில்லை.


இன்றைய முதல் வாசகத்தில் வரும் நிகழ்வில் ஈசாக்கின் மகன் யாக்கோப்பு தனது அதிர்ஷ்டத்தை நம்பாமல், தனது முயற்சியையும் தன்னம்பிக்கையையும் இலக்கு குறித்த தெளிவையும் முன்னிறுத்தியதால் அவனால் தந்தையின் ஆசிரை பெற முடிந்தது.



“நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்,

சூரியனின் கீழே குளிர் காய்ந்திருந்தான்,

செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான்,

எதுவும் செய்யாமலேயே மாய்ந்துவிட்டான்.”


ஜேம்ஸ் அல்பெரியின் வரிகள் இவை. இன்று செய்வோம் நாளை செய்வோம் என ஆண்டுகளைக் கடத்துவதிலேயே மாண்டு போகின்றோம் அல்லது பழைய ஆடைகளாகவும் தோர்ப்பைகளாகவும் மாறிவிடுகிறோம்.


ஆயிரம் அம்பு விடு, ஒன்றேனும் உன் இலக்கு தொடும்! முயற்சி பலனின்றி போனதால் முடங்கிவிடக்கூடாது. ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு பலனில்லை என எடுத்த காரியத்தை கைவிட்டு அடுத்த காரியத்திற்கு தாவுபவர்களால் இறுதியில் எதையுமே சாதிக்க முடியாது. மூன்று முறை விழுந்த இயேசு கூட எழுந்து தனது இலக்கு நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.


தடைக் கற்களைப் படிக்கற்களாகப் பார்க்கப் பழகிவிட்டால்,

தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து நடைபோட்டால், பிரச்சினைகளுக்கு பின்வாங்காமல் துணிந்து செயல்பட்டால் நாம் தான் அந்த புதிய ஆடைகளும்

தோர்ப்பைகளாகவும் இருப்போம்!


சிரமங்களுக்குப் பயந்தால் சிகரங்களைத் தொட முடியாது! எதிர்ப்புகள் இல்லாமல் ஏற்றங்கள் கிடையாது! துன்பம் நேராத வெற்றி நிலைக்காது! சிலுவை இல்லாமல் மீட்பு கிடையாது.


( குட்டி இயேசு )

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு