23/07/2023. பொதுக்காலத்தின் 16ம் ஞாயிறு.
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 12:13,16-18
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:26-28
நற்செய்தி வாசகம் : மத்தேயு 13 :24-43.
இறைவனின் களஞ்சியத்தில் உள்ள கோதுமைகளாய்
ஒரு பங்கில் உள்ள பங்குத்தந்தைக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஆலயத்தில் உள்ள ஒலிவாங்கியை திருப்பலிக்கு முன் சோதிப்பார். அந்த ஒலிவாங்கியின் முன் நின்று 'விண்ணரசு வருக விண்ணரசு வருக ' என்று கூறுவார். இதை கண்ட ஒரு இளைஞர்,அந்த குருவானவர் சென்ற பின்பு, அந்த ஒலி வாங்கியில் கூறிய ' அந்த விண்ணரசு யார்? உடனடியாக வந்து பங்குத் தந்தையை சந்திக்கவும்' என்று அறிவிப்பு கொடுத்தான்.
இந்த கதையை நகைச்சுவைக்காக சொல்வார்கள். இன்று நம் நடுவிலும் விண்ணரசு பற்றிய புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இன்றைய (மத்தேயு13:24-43) நற்செய்தி வாசகத்தின் முக்கிய நோக்கம் விண்ணரசு பற்றிய சரியான புரிதலை நமக்குத் தருவதாகவே உள்ளது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு விண்ணரசு பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. கடவுள் ஆட்சி என்பது, இறைவன் அனைத்து அரசுகள் மீதும் போரிட்டு இந்த உலகை வெற்றி கொள்வார் என்ற புரிதலே இருந்தது.
இந்தப் புரிதலை மாற்றி அமைக்க இயேசு உவமைகள் வாயிலாக, அன்று வாழ்ந்த மக்களுக்கும், இன்று அந்த நற்செய்தியை வாசிக்கின்ற நமக்கும் புரியவைக்க முயற்சிக்கின்றார்.
1. மண்ணக அரசு
புகழ்பெற்ற அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அணுகுண்டுகளை கண்டுபிடித்த பின், இவ்வாறு சொன்னார் " எந்த ஒரு எலியும் எலிப்பொறியை கண்டுபிடிப்பது இல்லை, ஆனால் மனிதர்கள் மட்டுமே மனிதர்களை அழிக்கின்ற பொறிகளை கண்டுபிடித்துள்ளார்கள் " என்று.
நமது மனிதனின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தோம் என்றால், மனிதர்களின் தவறுகளால், மனுக்குலம் எந்த அளவிற்கு அழிவுகளை சந்தித்துள்ளது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. எண்ணிலடங்கா போர்கள், அதில் வீழ்ச்சி அடைந்தது மனுகுலமே. பஞ்சம், ஏழை_ பணக்காரர்கள் வேறுபாடு, மருத்துவத்துறையில் கொள்ளை, கலவரம், போட்டி, அநியாய தீர்ப்புகள், லஞ்சம், பெண்களுக்கு ஏற்படும் வண் கொடுமைகள் என்று எண்ணில் அடங்கா தீமைகளை நம் நடுவில் விதைப்பதுதான் இந்த மண்ணுலக அரசு.
நற்செய்தியின் பின்புறத்தில் பார்க்கின்ற பொழுது கோதுமை பயிர்கள் நடுவே பயிரிடப்பட்ட களைகளைப்போன்று மண்ணுலக அரசியலில் ஏற்படும் தீமைகள் இருக்கின்றன. ஆக இந்த மண்ணுலக அரசு என்பது இறைவன் விரும்புகின்ற அரசு அல்லது இறைவனால் ஏற்படுத்த இருக்கின்ற அரசு என்பது நமக்கு தெளிவாகிறது.
2. விண்ணக அரசு
தீமை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில், பலரின் உள்ளங்களில் எழுகின்ற இயல்பான கேள்வி இது கடவுளுக்கு கண் இல்லையா? இந்தக் கேள்
விக்கு இன்றைய நற்செய்தி வாசகம் சிறந்த பதிலாக அமைகிறது.
தீமைகளை காணும் கடவுள் கூறுவது, வேண்டாம் களைகளைப் பறிக்கும் போது அவற்றோடு சேர்த்து கோதுமைகளையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும் எனவே அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம். முதலில் களைகளை பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கு என கட்டுகளாக் கட்டுங்கள். கோதுமைகளையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள். ( மத்தேயு 13 :29-30)
இந்த வார்த்தைகளின் பின்புலத்தில் இறைவன் நல்லவர்களை தனது கோதுமை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பார் எனவும் தீயோரை அழிவில்லா நெருப்பில் தள்ளுவார் எனவும், நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இறைவனின் விண்ணக அரசு இந்த மண்ணில் வந்தால் இறைவன் எவ்வாறு ஆட்சி செய்வார்? என்ற கேள்வி நம்மில் எழலாம்
இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் விண்ணக அரசு எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதிலும் சிறப்பாக இறைவன் எவ்வாறு ஆட்சி செய்வார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் சாலமோன் ஞானம் நூலாசிரியர்.
கடவுள் நீதி உள்ள அரசர் என்றும் கனிவுடன் தீர்ப்பு வழங்குவார் என்றும் நீதிமான்கள் சார்பாக இருப்பார் எனவும், கடவுளின் ஆட்சி பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
மனிதர்கள் இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும். தன் இறப்பிற்க்குப் பின் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இந்த உண்மையை புரிந்து கொண்டால் அவர்கள் தீயோனின் கலைகளாக இருக்க மாட்டார்கள்.
3. இறைவனின் கோதுமைகளாய்
இன்றைய இரண்டாம் வாசகத்தின் பின்புறத்தில். இறைவனின் கோதுமை களஞ்சியத்தில் நாம் சேர, இறைவனின் கோதுமைகளாய் இந்த மண்ணுலகில் நிலைத்திருக்க வேண்டும். அவ்வாறு நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை செய்ய தூய ஆவியார் இருக்கிறார் எனவும், நமக்காக இறைவனிடம் தொடர்ந்து பரிந்து பேசுகிறார் எனவும், நமது உள்ளங்களை அறிந்திருக்கிறார் எனவும் நமக்கு எடுத்துச் சொல்கிறார் புனித பவுல்.
ஆக இறைவனின் விண்ணரசுக்கு உட்பட்டவர்களாக நாம் வாழ, நமக்கு கடமை உண்டு. அதாவது இறைவன் நமக்கு கொடுத்த வாழ்க்கையை அவருக்கு உகந்த வகையில் வாழ வேண்டும்.
கண்கள்: கடவுள் நம் அனைவருக்கும் கண்களை கொடுத்துள்ளார், அதைக் கொடுத்த நோக்கம் பிறரை தீர்ப்பிடுவதற்காக அல்ல, பிறரது சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
நாவு : கடவுள் நம் அனைவருக்கும் நாவை கொடுத்ததன் நோக்கம், பிறரை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, உண்மை பேச வேண்டும் என்பதற்காகவே.
கைகள்: கடவுள் நமக்கு கைகளை கொடுத்ததன் நோக்கம், பிறரை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே.
காதுகள்: கடவுள் நமக்கு காதுகளை கொடுத்ததன் நோக்கம், தீமைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, தேவையில் இருப்பவருக்கு செவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே.
இவ்வாறு கடவுள் நமக்கு கொடுத்த அனைத்திற்கும், சிறந்த ஒரு காரணம் உண்டு. அதை நாம் சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்தினால், நாமே இறைவனின் விண்ணரசு கோதுமைகளாக வாழ்வோம். இல்லையெனில் அலகையின் களைகளாகவே இருப்போம்.
இறுதியாக
ஆண்டவர் நல்லவர் மன்னிப்பளிப்பவர் என்பதை, நாம் நமது தவறுகள் நடுவில் புரிந்திருப்போம். நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல், நாம் பெற்றுக் கொண்ட மன்னிப்பை பிறருக்கு கொடுக்கும்போது. இந்த மண்ணகமே விண்ணரசாக மாறுகிறது, மேலும் நாமும் இறைவன் சேர்த்து வைக்கும் கோதுமை மணிகளாக மாறுகின்றோம்.
👍
ReplyDelete