பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
30/07/2023.
இறைவன் கண்டெடுத்த செல்வங்கள்.
விண்ணரசு பற்றிய புரிதலோடு தொடர்புடைய இன்றைய நற்செய்தி, நாமே இறைவன் கண்டெடுத்த செல்வம் என்ற மைய கருத்தை நமக்கு கற்றுத் தருகிறது.
விண்ணரசு என்றால் என்ன? என்ற கேள்வி அன்று தொடங்கி இன்று வரை நம் நடுவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியை மக்களாட்சி என்கிறோம் .
அதுபோலவே இறைவனால் இறைவனின் பிள்ளைகளுக்காக இறைவனே நடத்தும் ஆட்சியை இறையாட்சி என்கின்றோம்.
இப்பொழுது இந்த இறைவனின் பிள்ளைகள் யார் என்ற கேள்வி நம்மில் எளிதாக எழலாம். இன்றயஇரண்டாம் வாசகத்தின் பின்புலத்தில் ( உரோமையர் 8:30 ) நான்கு நிலைகளில் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
1. இறைவனால் முன் குறித்து வைத்தோர்.
2. இறைவனால் அழைக்க பெற்றோர்.
3. இறைவனால் அவருக்கென ஏற்புடையவர்கள் ஆனோர்.
4. இறைவனின் மாட்சியில் பங்கு பெறுவோர்.
1.இறைவனால் முன் குறித்து வைக்கப்பட்டோர்
இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனால் முன்குறித்து வைக்கப்பட்டுள்ளோர். அதுவும் தாயின் கருவிலே நாம் உருவாவதற்கு முன்பே இறைவன் நம்மை அறிந்து இருக்கின்றார். எரேமியா 1:5.
2. இறைவன் நம் அனைவரையும் அழைத்துள்ளார்.
இறைவன் நம் அனைவரையும் அழைத்துள்ளார் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் உவமைகள் ( மத்தேயு 13: 44-52) சான்றாக உள்ளன.
புதையல் மற்றும் விலை உயர்ந்த பவளம் என்ற இரண்டு உவமைகளில், இயேசு விண்ணரசு பற்றி கூறுகிறார். இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால், விண்ணரசை புதையலைத் தேடிச் செல்லும் ஒரு நபராகவும், பவளத்தை தேடிச் செல்லும் ஒரு நபராகவும் புரிந்து கொள்ளலாம். அப்படி என்றால் அந்த புதையலும், பவளமும் நம்மையே குறிக்கிறது. இவ்வாறு நாம் அனைவரையுமே இறைவன் தனது ஆட்சிக்கு உட்பட்டிருக்க அழைப்பு விடுக்கிறார்.
3. இறைவன் நம்மை அவருக்கு ஏற்புடையவர்களாக மாற்றுதல்.
கலா 2:19-20 என்கின்ற, இறை வார்த்தையின் பின்னணியில் புனித பவுல் கூறுவது இதுவே, இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார். அதாவது இறைவன், தான் முன் குறித்து வைத்தவர்களை அழைத்திருக்கிறார் என்றும் அழைத்தவர்களை தமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியுள்ளார் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
4. இறைவனின் மாட்சியில் பங்கு பெற செய்தார்.
1 யோவா2: 3-6 என்கின்ற இறை வார்த்தையின் பின்னணியில் பார்த்தோம் என்றால். இறைவன் தான் முன்குறித்து வைத்தவர்களை அழைத்தார். அழைத்தவர்களை ஏற்புடையவர்கள் ஆக்கினார். ஏற்புடையவர்களை தமது மாட்சியில் பங்கு பெற வைத்துள்ளார், என்ற செய்தியை வேறு வார்த்தைகளில் தருகிறார் யோவான்.
இவ்வாறு இறைவனின் மீட்பு செயலானது இந்த நான்கு நிலைகளில் செயல்படுகிறது. நாம் இவற்றை சரியாகப் புரிந்து கொண்டால் அதுவே இறைவனின் ஞானமாக உள்ளது.
இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு புனித எகிப்து நாட்டு மரியா. புனித எகிப்து நாட்டு மரியா என்கின்ற புனிதையை பற்றி நம்மில் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
இவரை கடவுள் தம் திருவுளப்படி அழைத்தார். அழைத்தவரை தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்தவரை
ஏற்புடையவராக்கி தமது மாட்சியில் பங்கு பெற செய்தார்.
இவரது வாழ்க்கை சற்று சுவாரசியமாக இருக்கும். ஐந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர், தனது எகிப்து நாட்டில் இருந்து அலெக்சாண்ட்ரியா வருகிறார். 16 வருடங்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டார். பிறகு எருசலேம் செல்லும் திருப்பயணிகளை கண்ட பொழுது அவர்களோடு எருசலேம் வந்தார். எருசலேமில் ஆலயத்திற்குள் நுழைய முயற்சி செய்த பொழுது, அவரால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை.
தன் பாவ கறைகளே தன்னை ஆலயத்தில் நுழைய விடாமல் தடுக்கிறது என்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த அன்னை மரியாவின் திருவுருவப்படத்தின் முன் நின்று கண்ணீரோடு தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு தனக்காக இறைவனிடம் பரிந்துபேசி, தன்னை ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு மன்றாடினார்.
பிறகு வந்து முயற்சி செய்தபொழுது அவரால் ஆலயத்திற்கு நுழைய முடிந்தது. அங்கிருந்த திருச்சிலுவை முன் சென்று தனது குற்றங்களுக்காக மனம் நொந்து அழுதார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு யோர்தான் ஆற்றுக்கு அக்கறையில் சென்று அங்கிருந்த ஒரு பாலைவனத்தில் சுமார் 57 வருடங்கள் தவவாழ்க்கையில் ஈடுபட்டார்.
தனது 87 ஆவது வயதில், அவ்வழியே வந்த அருள்பணியாளர் யோசிமுஸ். என்பவரை அந்தப் பாலை நிலத்தில் சந்தித்தார். அருள் பணியாளரை கண்டவுடன் தனது கடந்த கால பாவ வாழ்க்கை அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டார்.
மேலும் அடுத்த முறை அவர் வரும் பொழுது. அவருக்காக நற்கருணை எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அருள் பணியாளரும் அவ்வாறே செய்தார். அதற்கு அடுத்து ஒரு புனித வாரத்தின் போது அருள்பணியாளர் மீண்டும் நற்கருணை எடுத்துச் சென்றார். அப்பொழுது அவர் எகிப்து நாட்டு மரியாளின் உடலானது காவல் தூதர்களால் பாதுகாக்கப்பட்டதை கண்டு வியந்து போனார்.
அவள் தனது கடந்த காலத்தில், என்னதான் பெரும் பாவியாக இருந்தாலும் அவள் தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் மாறி, இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்ததால், நமது திரு அவையானது அவளை ஒரு புனித நிலைக்கு உயர்த்தி இறைவனிடம் நமக்காக பரிந்து பேசுபவராக அங்கீகரித்துள்ளது.
இன்று இந்த புனிதையைப் போல, நம் அனைவரையும், இறைவன் தமக்கு சொந்தமானவர்கள் ஆக்கிக் கொள்ள, தமது ஒரே மகனின் உயிரையும் சிலுவையில் கையளித்தார். இதை நாம் உணர்ந்து இருக்கின்றோமா? அனைவருமே இறைவனின் பிள்ளைகள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா?
அவ்வாறு அறிந்திருந்தால் நம்மிடையே பிரிவுகளோ வேறுபாடுகளோ இருந்திருக்காது. நம்மால் ஒரு சமூக தீமையை அளிக்க முடிகிறதா, உதாரணத்திற்கு வரதட்சணையை ஒழிக்க முடிகிறதா? நம் இதையே எத்தனை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளார்கள்? அவர்கள் மக்களை சரியான வழியில் வழி நடத்துகிறார்களா?
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் மக்களை வழிநடத்த வேண்டிய ஞானத்தை இறைவனிடம் கேட்டு பெற்றுக் கொள்கிறார். இன்று நம் நடுவில் இருக்கும் தலைவர்களுக்கு மக்கள் பற்றும், மக்களை வழிநடத்த வேண்டிய ஞானமும் அதிகம் தேவைப்படுகிறது. அதில் குறை உள்ள காரணத்தினால், நாம் வாழும் இடங்களில் அமைதி இல்லாமல், கலவரங்கள் மட்டுமே இருக்கிறது.
தன்னை அறிந்து தான் வாழும் சமூகத்தையும் அறிந்த அரசர் சாலமோன், தன் மக்களை வழிநடத்த வேண்டிய ஞானத்தை இறைவனிடம் வேண்டியது போல், நாமும் இறைவனிடம் ஞானத்தை பெற வேண்டி இருக்கிறது.
இறுதியாக
எதையும் பொறுமையோடு தேடுங்கள். பொறாமையோடு தேடாதீர்கள். அவ்வாறு நமது வாழ்வில் இருக்கும் பொழுது நாமே இறைவன் கண்டெடுத்த செல்வங்களாய் வாழ முடியும்.
Comments
Post a Comment