09 ஜூலை 2023, ஞாயிறு*
*பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு*
செக்கரியா 9:9-10
திபா 145
மத்தேயு 9: 14-17
நாமே இறைவனின் நுகங்கள்
ஒரு முட்டாள் விஞ்ஞானி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, அவரது வாகனம் பழுதடைந்து விட்டதாம். பக்கத்தில் வேறு கடை இல்லாததால் அந்த விஞ்ஞானியே இறங்கி சரி செய்ய தொடங்கினார்,அவர் இறங்கி சரி செய்யும் பொழுது ஒரு சக்கரத்தில் உள்ள நான்கு போல்டுகளும் அருகிலுள்ள சாக்கடையில் விழுந்து விட்டது. அவ்வழியே வந்த அழுக்கு உடை அணிந்த ஒரு பையனிடம் அந்த விஞ்ஞானி சொன்னாராம் "நீ எனக்காக அந்த சாக்கடையில் இறங்கி அந்த நான்கு போல்டுகளையும் எடுத்துக் கொடுத்தால் நான் உனக்கு மிட்டாய் தருகிறேன்" என்று. அதற்கு மறுமொழியாக அந்தப் பையன் கூறியது "மற்ற மூன்று சக்கரங்களில் உள்ள நான்கு போல்டுகளில் ஒரு ஒரு போல்ட்டை எடுத்து இதில் மாட்டிக் கொண்டு அருகில் இருக்கும் பழுது பார்க்கும் கடைக்கு சென்றால் அவர்கள் வாகனத்தை சரி செய்து விடுவார்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம். இந்தப் பையனை இவ்வளவு குறைவாக எடை போட்டு விட்டோமே என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு தலைகுனிந்தார் அந்த விஞ்ஞானி.
ஒரு பறவை உயிரோடு இருக்கும் பொழுது புழு அதற்கு உணவாக இருக்கிறது. அதுவே அந்தப் பறவை இறந்த பின் அந்தப் புழுவிற்கு பறவை உணவாக இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம், அதனால் இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
இன்றைய வாசகத்தில் இயேசு தரும் அழைப்பு கூட, அனைவருக்குமானதாகவே இருக்கிறது. தாழ்த்தப்பட்டவரை இறைவன் உயர்த்துகிறார். திபா 145 : 14.
பட்டியலினத்தாரை கூட தாழ்ந்தவர்கள் என்று கூறுவதை விட தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறினால் அவர்கள் படும் இன்னலும் இடுக்கலும் நமக்கு புரிய வரும்.
இந்த உலகில் யாருமே யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. ஒரு சிலர் ஒரு சிலரை தாழ்ந்தவர்களாக பார்ப்பதால், இங்கு ஏற்றத்தாழ்வுகள் தலை விரித்து ஆடுகின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் களைந்து அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்றும், அனைவருக்கும் இறைவன் இளைப்பாறுதல் தருகிறார் என்றும், கற்றுத் தருகிறது இன்றைய வாசகங்கள்.
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதாக கூறுகின்ற பவுல். நாம் தீய வழியில் செல்லாமல் நேரிய வழியில் செல்ல அழைப்பு விடுக்கிறார்.
தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் அனைவரும் திருமுழுக்கு பெற்றோம் என்றால், நாம் அனைவரும் கடவுளின் முகங்களாக இந்த உலகில் வலம் வருக்கிறோம்.
தந்தை
கடவுளே நம் அனைவருக்கும் அரசர் என்றும், அவரின் ஆட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நலன்களைப் பற்றியும், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். செக்கரியா 9:9-10.
ஒவ்வொரு முறையும் நாம் இயேசு கற்றுத் தந்த ஜெபத்தை சொல்லும் பொழுது 'உமது ஆட்சி வருக' என்ற வார்த்தைகளை சொல்லியே ஜெபிக்கிறோம். ஆனால் அதன் பொருளை முழுமையாக உணர்ந்திருக்கின்றோமா என்பது ஒரு கேள்வி குறிதான். ஒரு கடல் முதல் மறு கடல் வரை உலகின் கடை எல்லை வரையும் ஆட்சி செய்கின்றார் நம் ஆண்டவர். திபா 72 : 8.
இவ்வாறு உயிரினங்கள் அனைத்தும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டது என்பது இங்கு நமக்கு புரிய வருகிறது. அனைவரும் கடவுளின் மக்களே. பெரியவர் என்றோ சிறியவர் என்றோ யாரும் இல்லை.
மகன் ( இயேசு )
கொலோ 1 : 15யின் படி, பவுலடியார் கூறுவது போல, இயேசு கிறிஸ்து கட்புலனாகாத நம் தந்தையாகிய கடவுளின் சாயல் ஆக உள்ளார். தந்தை மகனுக்கு முழுமையாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் ( யோவான் 1 : 18 ). மகன் மீது தந்தை முழுமையாக அன்பு கொண்டு உள்ளார் ( யோவான் 3 :35 ). தந்தை மகனை முழுமையாக அறிந்திருக்கின்றார் ( யோவான் 10: 15 ) மகனிடமே அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளார் ( லூக்கா 10: 22 )
ஆக கண்களால் காண முடியாத இறைவனின் சாயலாக வந்த இயேசு மீது கடவுள் கொண்டுள்ள அன்பு நம்மை வியப்படையச் செய்கின்றது. மனிதனாகப் பிறந்த இயேசு கடவுளின் சாயலாக மட்டுமில்லாமல், கடவுளின் அன்பை நமக்குப் பெற்றுத் தரும் இணைப்பு பாலமாகவும் இருக்கிறார்.
1 கொரிந்தியர் 3: 16 யின் படி, அவர் கூறுவது போல நாம் அனைவரும் கடவுளின் கோயிலாக இருக்கின்றோம், அதாவது இயேசு கிறிஸ்து வழியாக நாம் பாவத்திலிருந்து தூய்மை அடைந்துள்ளோம். நாமே இறைவன் வாழும் கோயிலாகவும் இருக்கின்றோம்.
எபே 4:22-25யின் படி, கடவுளின் இயல்பை பெற்றுக் கொண்ட நாம் பழைய மனிதர் குரிய இயல்பை களைந்து விட்டு. இயேசு கிறிஸ்து மூலம் பெற்றுக்கொண்ட புதிய மனிதர்களுக்குரிய இயல்பை அணிந்து கொண்டு வாழ வேண்டுமென்பதற்காகவே இயேசு தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார்.
நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த கல்வாரி பலி உலகின் எல்லா இடங்களிலும், மொழிகளிலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது இயேசு கிறிஸ்து மூலமாக இந்த உலகில் இருக்கும் அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதே அதன் பொருள். ஆக மகன் வழியாக நாம் தந்தையை அறிகிறோம், கடவுளின் ஆலயங்களாக மாறுகின்றோம் கடவுளின் நுகங்களாக மாறுகின்றோம்.
தூய ஆவி
1 யோவான் 4:2 யின் படி, கடவுளை எவருமே என்றுமே கண்டதில்லை, என்பது புதிய ஏற்பாட்டின் புரிதலாக இருந்தாலும், பழைய ஏற்பாட்டின் புரிதலின்படி, அதாவது, விடுதலைப் பயணம் 33: 20 ன் படி கடவுளை நேரில் கண்டவர்கள் இறந்து விடுவார்கள். என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியானால் கடவுளிளை நாம் எப்படி காண்பது என்பதற்கு பதில் அளிக்கும் யோவான் (1 யோவான் 4:2), நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்து இருப்பார், அவரது அன்பு நம்மில் நிலைத்திருக்கும், என்கிறார்.
இவ்வாறு நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழும் பொழுது நாம் வாழும் வாழ்வு தூய்மையான வாழ்வாக இருக்கும், அதன் பரிசாக நம்மால் கடவுளைக் காண முடியும் என்கிறார் இயேசு.( மத்தேயு 5:8)
இதுவே இன்று நமக்கு கடவுள் தரும் வெளிப்பாடாக உள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உள்ள தமிழ் இலக்கியமாக இருக்கட்டும். "அனைவரும் சகோதர சகோதரிகளே" என்று கூறும் திருத்தந்தை. பிரான்சிஸ் ஆக இருக்கட்டும். இன்று நமக்கு கூறுவது ( யோவான் 17 : 21 ) எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக, என்பதே ஆகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருக்கும் அனைவரையும் யாதொரு வேறுபாடுமின்றி தன்னிடம் அழைக்கின்றார், நம்மையும் அதுபோல் இருக்க அவரிடம் கற்றுக்கொள்ள சொல்கிறார்.
இறுதியாக
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளது போல், நீ, நான் என்று சொல்லிப் பார் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லிப் பார் உதடுகள் கூட ஒட்டும் என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று சொல்லிச் சென்றார்.
நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை முதலில் நாம் கலைந்தோமாயின். நாம் கடவுளின் நுகங்களாக மாறுவோம், அனைவரையும் சகோதர சகோதரிகளாக காண்போம், நம்மிடையே வேற்றுமைகள் இருக்காது. இறைவனின் அரசு இந்த மண்ணில் வரும். நம்மில் இறைவனின் ஆவி குடிகொள்ளும். இறைவன் தரும் அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் நம் வாழ்வில் நிலைக்கும்.
(குட்டி இயேசு)
Thought provoking..congrts
ReplyDeleteAmen.
ReplyDelete