16 ஜூலை 2023, ஞாயிறு*

*பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு.


முதல் வாசகம்: -எசா 55:10-11


இரண்டாம் வாசகம்: - உரோ 8: 18-23.     


நற்செய்தி வாசகம் -- மத் 13:1--23... 


 கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு மாணவன் தனது சக நண்பனிடம் 'நான் 34 மதிப்பெண்கள் எடுத்து விட்டேன்' என்று பெருமையோடு கூறினான். அதற்கு அவனுடைய நண்பன் கவலை கொள்ளாதே, அடுத்த தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று விடலாம், என்று ஆறுதல் கூற, மறுமொழியாக அந்தப் பையன் சொன்னான் நான் ஆறு பாடங்களில் 34 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன் என்று.  


இது நாம் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாக இருக்கலாம் இருந்த போதிலும், இன்று நம் நடுவில் இருக்கின்ற மாணவ மாணவியர்கள் தங்களது இலக்கு என்ன என்று தெரியாமல் தாங்கள் என்ன செய்ய வேண்டும்? எதை கற்று கொள்ள வேண்டும்? என்று தெரியாமல், வழி தவறி சென்று  கொண்டுதான்  இருக்கின்றார்கள். 


அதற்கு மிக முக்கிய காரணம் இன்று நம் கையில் இருக்கின்ற சமூக ஊடகக்  கருவிகளும், வலைத்தளங்களும்தான்.


திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை சொன்னார் செல்போன்கள் என்பது முற்றிலும் தீமையானது அல்ல, அது கடவுள் நமக்கு கொடுத்த கொடை என்று. அது கடவுளின் கொடையாக இருப்பதும் அல்லது சாத்தானின் கருவியாக  மாற்றுவதும் நமது கைகளிலே உள்ளது. நாம் நன்கு சிந்தித்து பார்த்தோமென்றால் உண்மை என்னவென்று நமக்கு புரியும். இதற்கு முன் அனைத்தும் இயற்கையாக இருந்தது இப்பொழுது அனைத்துமே செயற்கையாக மாறிக் கொண்டு வருகிறது.


அதாவது பணத்திற்காகவும், அல்லது ஆதாய நோக்கத்தோடும் அனைத்தும் செயல்பட்டு  வருகிறது. குறுஞ்சி என்னும் நிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் என்று நாம் படித்திருப்போம் ஆனால் இன்று குவாரிகளும் குவாரி சார்ந்த பகுதிகளுமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. முல்லை நிலத்தை காடும் காடு சார்ந்த இடங்களும் என்று படித்திருப்போம் இப்பொழுது எஸ்டேட் களும் எஸ்டேட் சார்ந்த இடங்களுமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மருத‌ நிலத்தை  வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் என்று படித்திருப்போம். இப்பொழுது கட்டிடங்களும் கட்டிடம் சார்ந்த பகுதிகளுமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. நெய்தல் நிலத்தை நாம் கடலும் கடல் சார்ந்த இடங்களும் என்று படித்திருப்போம்‌ ஆனால் இப்பொழுது ஹார்பெர்களும் கண்டெய்னர்களும்‌உள்ள பகுதிகளாக மாரிக்‌ கொண்டு இருக்கின்றது. பாலை நிலத்தை மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் என்று படித்திருப்போம். ஆனால் இப்பொழுது லாரிகளும் லாரிகள் அள்ளிச் செல்லும் மணல் பகுதிகளுமாக இருக்கின்றது. இந்த மாற்றம் தானாக நடக்க வில்லை எவரோ ஒருவர் லாப நோக்கத்தை நம்மில் விதைத்ததன் விளைவாகவே இவ்வாறு நடந்திருக்கிறது.


இன்றைய‌ நற்செய்தி வாசகத்தில் நான்கு வகையான நிலங்களில் இறைவனின் வார்த்தையானது விழுகிறது

1.பாதையில்,

2‌.பாறைகளில்,

3.முட்களில்,

4.நல்ல நிலத்தில்.


இதில் பாதையோரம் விழுந்த விதைகள் இன்று இளைஞர்களைக் குறிக்கின்றது. இறைவனின் வார்த்தை அவர்களின் இதயத்தில் விழுகின்ற பொழுது, அவர்கள் தங்கள் நிலமாகிய உள்ளத்தை  பாதையில் விழுந்த நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் கையிலிருக்கும் சமூக ஊடக கருவிகளை திறந்தவுடன் அதை பயனற்ற முறையில் பயன்படுத்துவதையும், அதில் தமது அதிக நேரத்தை விரையமாக்குவதையும் காண்கிறோம். இந்த நிலத்தில் சமூக ஊடகக் கருவிகள் வழியாக தீயோர் இறைவனின் விதையை எடுத்து சென்று விடுவார்.


பாறையில் விழுந்த விதைகளாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் சமூக ஊடகக் கருவிகளை நல்லவற்றை பார்க்கவே திறக்கிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் அதிலிருந்து விலகி பயணற்றதை பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். இவர்களின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதையும் கருகி விடும்.


மூன்றாவதாக, முட்கள் நடுவே விழுந்த விதைகள் போல பெரியோர் மத்தியில் இன்று இறைவனின் வார்த்தை விழுந்து கிடக்கிறது. அதாவது சிறிது நேரம் சமூக ஊடக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி விட்டு அதிலிருந்து பலனை பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களே அறியாமல் பயணற்றதில் அவர்கள் மனம் திரும்பி போய் விடும்.


இவ்வாறு இறைவனின் வார்த்தை நம்மில் விதைக்கப்பட்டிருந்தாலும் இளையோர், சிறியோர், பெரியோர் என இவர்கள் அனைவரும் கவனமாக இல்லாத நேரத்தில், அது அவர்களை விட்டு அகன்று, கருகி, நெறிக்கப்பட்டு விடுகிறது.


ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த முதிர்ச்சி அடைந்த விதைகள் 30, 60, 100 மடங்குகளாக பலன் அளிக்கிறது.

அதாவது இறைவனின் வார்த்தையை பார்ப்பதில் அல்லது தொடர்ந்து இறை வார்த்தையை வாசிப்பவர்கள் 30 விழுக்காடுகளும்,

தொடர்ந்து இறை வார்த்தையை வாசிப்பது, சிந்திப்பது போன்ற செயல்களில் கலந்து கொள்பவர்கள் 60 விழுக்காடுகளும், 

இறை வார்த்தை சாட்சிகளாக வாழ்கிறவர்கள் 100 விழுக்காடு பலன் அளித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.


ஆக இறைவனின் வார்த்தையானது நமது உள்ளத்தில் விதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நாம் எந்த நிலையிலிருந்து அந்த இறை வார்த்தையைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதுவே இன்று நம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கின்றது


மழை நீராக இருக்க வேண்டும்.


மழையிலிருந்து வருகின்ற நீர் நிலத்தை நனைத்து, விதையை வளரச்செய்து பலன் அளிக்காமல் மீண்டும் வானத்திற்குச் செல்லாது. அது போலத்தான் இறைவனின் வார்த்தையும் இருக்கும் என்று கூறுகிறது இன்றைய முதல் வாசகம்.


நம்மிடம் விதைக்கப்படும் இறை வார்த்தையை பயனுள்ளதாக மாற்றுவதும் பயனற்றதாக மாற்றுவதும் நமது கைகளிலே தான் இருக்கிறது. நாம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான சமூக ஊடக APP களில் நாம் எதுவும் கட்டணமாக செலுத்துவது இல்லை. இலவசமாகவே அதை பயன்படுத்துகிறோம்.


அதற்கு காரணம் அவர்கள் நமது தகவல்களை, நம்மை அறியாமலே அல்லது நம்முடைய அனுமதி இல்லாமலே எடுத்து விடுகிறார்கள். அதை சந்தை வெளியில் விற்றும் விடுகிறார்கள்.


இதனாலே நாம் எதை பயன் படுத்துகிறோம்?

எதை தேடுகிறோம்?

நமக்கு என்ன தேவை?

என்பதை நம்மை விட அந்த பண முதலாளி குழுவினருக்கே தெரிகிறது.


ஆனால் அதையும் கடந்து இறை வார்த்தைக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். அது நம்மில் பலன் கொடுக்க விட வேண்டும்.


அப்படியென்றால் சிறியோர் பெரியோர் இளையோர் ஆகிய மூன்று பேரும், தங்களை பயனற்ற வழியில் வழி நடத்தும் சமூக ஊடக கருவிகளிடமிருந்து வழி மாறிச் செல்ல வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும்.


சிறியோருக்கு சரியான ஒழுக்கத்தை வீடுகளில் கற்றுத் தர வேண்டும்.


நமது கோவில்களில் இளையோர்கள் எங்கே போனார்கள்? அவர்களை மீண்டும் நமது கோயில்களுக்கு அழைத்து வர வேண்டிய  கடமை நமக்கு உண்டு. ஆக நமது கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டும்.


பெரியவர்கள் பல நேரங்களில் சீரியல்களில் சிக்கிக் கொள்கிறார்கள், அதிலிருந்து விடுபட்டு வெளி வர வேண்டும்.


நாம் இறை வார்த்தையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். ஓட முடிய வில்லையென்றால் நடந்து கொண்டு இருக்க வேண்டும். நடக்க முடியவில்லை யென்றால் தவழ்ந்து செல்ல வேண்டும். தவழ்ந்து செல்ல முடிய வில்லை என்றால், நகர்ந்து செல்ல வேண்டும், நகர்ந்து செல்ல முடியவில்லை என்றால், ஊர்ந்து செல்ல வேண்டும், இவ்வாறு ஓய்வின்றி இறைவார்த்தையையும்  இறைவனையும் நோக்கி நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.


நாம் இறைவனையும் இறை வார்த்தை தேடு வதையும் விட்டு விலகி செல்லக்கூடாது. அவ்வாறு இறைவார்த்தை நம்மில் செயல்பட நாம் அனுமதிக்கின்ற பொழுது நாமே இறைவனின் விதையாகவும், இறைவனின் வார்த்தையாகும் இருக்கின்றோம்.

நம்மில் இறைவார்த்தை நூறு மடங்கு பலனைத் தரும்.


இறைவன் நம்மில் தொடர்ந்து செயல்பட தொடர்ந்து இறை அருளை மன்றாடுவோம்.

 

       (குட்டி இயேசு)

Comments

Popular posts from this blog