13/ 08/2023. பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு


முதல் வாசகம்: 1 அரசர்கள் 19: 9a, 11-13a

பதிலுரைப் பாடல்: திபா 85: 8ab,9. 10-11. 12-13 (பல்லவி: 7)

இரண்டாம் வாசகம்: உரோ9: 1-5

நற்செய்தி வாசகம்: மத்தேயு 14: 22-33.



 பயணப் படிக்கட்டுகள்


1. ஒரு கிராமத்தில் அனைவரும் மழை வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிறுவன் மட்டும் கையில் குடையோடு வந்தான். இதுதான் நம்புவது ( believe ), நான் நினைப்பது நடக்கும் என்று உறுதியான உணர்வு. தன் மீது கொள்ளும் நம்பிக்கை.


2. ஒரு குழந்தையை தூக்கிப்போட்டு பிடிக்கும் பொழுது, அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பு இருக்கும். இதற்கு காரணம் நாம் அந்த குழந்தையை பாதுகாப்பாக மீண்டும் பிடிப்போம் என்பதாகும். இதுவே பிறர் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை. ( trust )


3. ஒவ்வொரு இரவும், நாம் தூங்கப் போவதற்கு முன், கடிகாரத்தில் அலாரம் வைத்து உறங்குவோம், நாளை என்பது நிச்சயம் இல்லாத இந்த வாழ்விலே, அடுத்த நாளுக்கான அலாரத்தை கடிகாரத்தில் வைத்து விட்டு தூங்கச் செல்லும் உள்ளம் கொண்டிருப்பது தான் எதிர்நோக்கு(hope). இருளில் கூட ஒளியை பார்ப்பது. 


இன்று நம் வாழ்க்கை முழுவதும் தன் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, புலன்களுக்கு அப்பாற்பட்ட படைத்தவனின் மீது நம்பிக்கை என்று நகர்ந்து கொண்டிருக்கிறது. 


இன்றைய நற்செய்தி வாசகமானது(மத் 14:22-33)மூன்று பிரிவுகளாக உள்ளது.


1. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்தை விட்டு அனுப்புவது.


2. இயேசு தனியாக இறைவேண்டல் செய்வது.


3. இயேசு கடல் மீது நடப்பது.


1. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்தை விட்டு அனுப்புவது போல், இன்று நாமும் நமது படிக்கும் இடங்களில் இருந்து அல்லது வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிறகு, அனைவரையும் அனுப்பிவிட்டு தனியாக இருக்கத்தான் நினைப்போம்.


தனிமை என்பது தவறல்ல, ஆனால் தனிமையில் கவனம் இல்லை என்பது மிகப்பெரும் அழிவை உண்டாக்கும்.


பெரும்பாலான சமூக ஊடகங்களுக்கு ஆயுதமாக நமது தனிமைதான் உள்ளது. நமது தனிமையை போக்குவதாக உள்ளே வந்து, நமது மனதை வேறு திசையில் அழைத்துச் செல்வதையே வேலையாக கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பள்ளி படிக்கும் மாணவனுக்கு வகுப்பறையில் வெறும் இரண்டு நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அவனது முகநூல் மற்றும் whatsapp போன்ற சமூக ஊடக கருவிகளில் ஏராளமான நண்பர்கள் இருப்பார்கள்.


இவ்வாறு மாய பிம்பத்தைக் காட்டும் இந்த தொடுதிரையானது. நம்மை அறியாமலே நமது இயல்பு நிலையை மாற்றி விடுகிறது. பிறர் பசியில் இருக்கும் போது உதவ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும் நாம் அதை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் விளம்பரம் தேடும் நிலைக்கு நம்மை தள்ளி விடுகிறது.


2. இயேசு தனியாக இறைவனிடம் வேண்டினார்.


இயேசு இறைவனிடம் வேண்டுவதற்கு ஒரு மலைக்கு செல்வதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். பழைய ஏற்பாட்டு பார்வையின் படி மலை என்பது இறைவன் உறையும் இடமாக இருக்கிறது.


இன்று நம்மில் பலர் தனியாக இறைவனிடம் வேண்டச் செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் முன் வைப்பது. அவர்களது நலம் மற்றும் அவர்களது குடும்ப நலனை மட்டுமே இறைவனிடம் வேண்டுதலாக எழுப்புவார்கள். ஆனால் பல வேலைகளில் இறைவனின் குரலை கேட்க தவறி விடுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அலைபேசியிலிருந்து வரும் சத்தத்தை கேட்கிறவர்கள், இறைவன் நம்மை கடந்து செல்ல பயன்படுத்தும் மெல்லிய ஒளியை கேட்பதில்லை.


3. இயேசு கடல் மீது நடந்து வருகிறார்.


இயேசு கடல் மீது நடந்து வருகிறார், சீடர்கள் அவரைப் பார்த்து அச்சப்படுகிறார்கள், இயேசு அவர்களிடம் அஞ்சாதீர்கள் என்கிறார், பேதுருவும் கடலில் நடந்து வருகிறார், பேதுரு அலைகளைக் கண்டு தனது நம்பிக்கையை கைவிட்டு, கடலில் மூழ்குகிறார்.இயேசு தம் கையை நீட்டி அவரை பிடித்து நம்பிக்கை குன்றியவனே ஏன் ஐயம் கொண்டாய் என்று கேட்கிறார், இறுதியாக உண்மையாகவே இவர் இறைமகன் என்று படகிலிருந்தோர் இயேசுவை பணிகின்றார்கள்.


இவ்வாறு ஒரு புள்ளி தொடங்கி அடுத்த புள்ளியில் முடிவடையும் இந்த நிகழ்வு நமக்கு வாழ்வின் எல்லா சூழ்நிலைகளைப் பற்றியும் அழகாக எடுத்துக் கூறுகிறது.


நாம் இந்த உலகிலே பிறக்கிறோம், நமது உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற அச்சம் நம்மை சூழ்ந்து கொள்கிறது, ஒவ்வொரு பகல் விடியும் பொழுதும் அந்த விடியல் வழியாக இறைவன் அஞ்சாதே என்று நம்மை ஊக்கப்படுத்துகிறார். வாழ்க்கை என்னும் கடலில் நாமும் நடக்கின்றோம், நமது பார்வையை இயேசுவின் பக்கத்தில் இருந்து, கடல் அலைகள் பக்கம் திருப்புகின்ற பொழுது, நாமும் கடலில் மூழ்க தொடங்குகிறோம், இறைவன் பல நல்ல உள்ளங்கள் வழியாக நமது கைகளை பிடித்து, வாழ்க்கை என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை தூக்கி விடுகிறார், பல நேரங்களில் நம்பிக்கை இழந்து வாழும் நம்மை பார்த்து அவர், நம்பிக்கை குன்றியவர்களே ஏன் பயம் கொண்டீர்கள் என்று கேட்கிறார். நம் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இறைவனை வாழ்வின் அனுபவங்கள் வழியாக உணர்ந்து கொள்கிறோம், அவரை பணிந்து வணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.


இவ்வாறு நம் வாழ்க்கை பயணமானது, படிப்படியாக இறைவனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் நாம், முதலில் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், அடுத்ததாக பிறர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும், இறுதியாக இறைவன் மீதும் நம்பிக்கை வைக்கின்ற பொழுது, நம் உள்ளத்தில் எழும் அச்சம் அனைத்தும் நீங்கி, நம்மால் இறைவனின் மெல்லிய குரலை(1 அரசர் 19:13) நமது சமூகத்தில் உள்ள மக்கள் வழியாக கேட்க முடியும், அதுவே இன்றைய பதில் உரை பாடலில்(தி பா 85: 7)வரும் இறைவனின் பேரன்பும் மீட்பும் ஆகும்.


இறுதியாக


கிறிஸ்தவ மதிப்பீடுகளான நம்பிக்கை அன்பு எதிர்நோக்கு, இவை கற்றுத்தரும் பாடம் நம்மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, இறைவன் மீது நம்பிக்கை என்ற மூன்று புள்ளிகளில் அடங்கும்.


இதை முழுமையாக புரிந்து கொண்டால் நமது வாழ்க்கையும் பேதுருவியின் வாழ்க்கைப் போல் மாறும். கடல் மீது இயேசு நடந்த பொழுது, பேதுரு தான் விரும்பியவாறு கடல் மீது நடக்க ஆசைப்பட்டார், ஆனால் பயத்தால் மூழ்கிப் போனார்.


இந்த மூன்று புள்ளிகளையும் உணர்ந்த பிறகு, இயேசுவைப் போல் அல்லாமல் தலைகீழாக சிலுவையில் இறக்கவும் துணிவு கொண்டார்.


இறை அன்பு எந்நாளும் நம்மோடு இருக்கின்றது என்பதை உணர்ந்து, பிறர் மீதும் இறைவன் மீதும் நம்பிக்கை கொண்டு நல்வாழ்வு வாழ்வோம். அதுவே நம் வாழ்க்கை பயணத்தின் படிக்கட்டுகள் ஆகும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு