27/08/2023

பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு


எசாயா 22: 19-23

உரோமையார் 11:33-36

மத்தேயு 16:13-20.



இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. ஏ பி ஜே அப்துல் கலாம்.


வரலாற்றில் தனக்கென எழுதப்பட்ட பக்கங்களை படிக்க வைப்பவரே தலைவர் ஆவார். இன்றைய வாசகங்களின் கருப்பொருளும் தலைமை பண்பை மையப்படுத்தியதாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை திருஅவையின் முதல் திருத்தந்தையாக மாற்றப் போவதை முன்னறிவிக்கின்றார். திருஅவையின் தலைவர் இயேசு கிறிஸ்து. அவருக்கு அடுத்தபடியாக திருஅவையை பொறுப்புடன் வழி நடத்தும் பணியானது புனித பேதுருவுக்கு வழங்கப்பட்டது. 


இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உடையவர்களும் இல்லை. எந்தத் திறமையும் இல்லாதவர்களும் இல்லை. இயற்கை ஒரு சமத்தன்மையுடன் நம்மைப் படைத்திருக்கிறது. சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக் கால்கள் கனமாக இருக்கிறது, வண்ணமில்லாத மலர்களுக்கு வாசம் கூடுதலாக இருக்கிறது. என்று சொல்லி உள்ளார் ஆசிரியர் வெ. இறையன்பு என்பவர்.


இயற்கையும் இறைவனும் நம்மை சமமாகவே படைத்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் இன்றைய தலைமைத்துவம் என்பது எப்படிப்பட்ட உருவத்தை எடுத்துள்ளது என்பதுதான் இங்கு கேள்விக்குறியாக உள்ளது. பொது சேவை மையங்கள் கூட பண சேவை மையங்களாக மாறிக் கொண்டு வருகின்றது. தலைமைத்துவத்தின் முக்கிய பண்பு நலன்களாகிய பொதுநலன் தேடுதல் என்கின்ற நிலை மாறி பண நலம் தேடும் நிலை பரவிக் கொண்டிருக்கின்றது.


வரலாற்றில் பல நல்ல தலைவர்களும் இருந்திருக்கின்றார்கள், பல கெட்ட தலைவர்களும் இருந்திருக்கின்றார்கள். அம்பேத்கர், காமராஜர் போன்ற நல்ல தலைவர்களும் ஹிட்லர் போன்ற கெட்ட தலைவர்களும் மக்களை ஆளும் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். 


தலைமைத்துவத்தை நம்மில் எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்கு புனித பிரான்சிஸ் அசிசியார் எழுதிய வரிகள், நமக்கு நல்ல பாடமாக உள்ளது.


"அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுவேன்" இந்த உலகில் தேவைப்படுவது அமைதி ஆனால் எங்கு பார்த்தாலும் சண்டை சச்சரவு மட்டுமே நம்மை சூழ்ந்து இருக்கின்றது. இந்த சூழலில் அந்த அமைதியை உலகில் நிலைநாட்டும் தூதுவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றது.


"அன்பனே இறைவனே என்னிலே வாருமே" நம் இடையே உள்ள ஆணவம் அகங்காரம் அனைத்தையும் அழிக்க இறைவனின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது, அந்த இறைவனை நம்மில் குடிகொள்ள செய்ய வேண்டும்.


"பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும், வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும், கலக்கமடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்"


திருமுழுக்கில் இயேசு கிறிஸ்து வழியாக தந்தையோடு இணைக்கப்பட்ட நாம், தீயோனின் பகை என்னும் கருவியை நம் உள்ளத்தில் வைத்திருப்பது சரியா?

சிலுவையிலும் தன்னை துன்புறுத்திய வரை மன்னித்த இயேசு, நமக்கு வெறும் முன்னுதாரணமாக மட்டுமே இருக்கிறாரா? ஏன் நமது உள்ளம் பிறரை நம்புவதில் தயக்கம் காட்டுகிறது?


"தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும், இருளே சூழும் பொழுது ஒளியை ஏற்றவும், துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்"


நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள். அதுவே உண்மையான மனத்திடம். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் இல்லாமல் பிறர் வாழ்வில் எரியும் பிறரின் துயர வேலைகளில் நாம் மெழுகுதிரிகளாக நாம் ஏன் இருக்கக் கூடாது? பிறரின் துயர வேலைகளில் ஏன் நாம் அவருக்கு இறைவனின் உதயமாக இருக்கக் கூடாது?.


"ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும், கொடுப்பதில் நிறைவை கண்டு மன்னிப்பு வழங்கவும், தன்னலம் ஒழித்து புதிய உலகம் படைக்கவும்"


பிறரை சரியாக புரிந்து கொண்டு அவருக்கு நமது அன்பையும் ஆறுதலையும் கொடுத்து, மன்னிப்பை பெறுவதை விட மன்னிப்பை வழங்கும் உள்ளத்தை கொண்டவர்களாகவும், தன்னலத்தை ஒழித்து புதிய உலகம் படைப்பவர்களாகவும் நாம் இருக்கின்ற பொழுது, இறைவனின் தலைமைத்துவம் நம்மில் வெளிப்படும். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் உரோமையருக்கு(11:33-36) அறிவுரையாக கூறுகிறார். அதாவது கடவுளின் அறிவையும் ஞானத்தையும் அவரது உள்ளத்தையும் அறிந்து செயல்படுகிற நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும், என்பதே அந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது.


பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது என்ன ?


பிறந்தார் - படித்தார் - வேலை பார்த்தார் - மணந்தார் - பிள்ளைகள் பெற்றார் - மூப்பு அடைந்தார் - இறந்தார். அவ்வளவுதான். 7 சொற்கள். வாழ்க்கை முடிந்து விட்டது. வேறு ஏதாவது நடக்கிறதா?


நம் வாழ்க்கை எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது. வேறு ஒன்றும் இல்லை.


இப்படி என் வாழ்வும் போய் விடக் கூடாது. நான் இந்த சூழலில் இருந்து தப்பிக்க வழி சொல் என்று இறைவனை வேண்டுகிறார். சுந்தரர்.


"கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்

கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்

நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்

நிலவெண் மதிசூ டியநின் 

மலனே

நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்

சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்

தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே"


ஒருவன் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வீடு கட்டினான். சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு. பார்த்து பார்த்து கட்டினான்.


"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

  நரைத்தார் இறந்தா ரென்று"


வீட்டைக் கட்டி - வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து - உடை உடுத்தி - நரை பருவம் எய்தி - இறந்து போனான்.


வீடு என்பது இங்கே ஒரு உவமை. வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி, நடத்தல் - படித்தல், வேலையை செய்தல் போன்றவை, உடுத்தார் - அனுபவித்தல்,மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து.


நரைத்தல் - வயதாகிப் போதல் இறத்தல் - முடிவு, இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு போல இந்த வட்டத்துக்குள் சுத்தி சுத்தி வர வேண்டும்.


இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள்.


பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியதுதானா. 


பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா?


நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் வேண்டுகிறார்.


நாம எப்படி?


இறுதியாக


யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.

எல்லோரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கும்.


எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள் வாழப்போவது சில காலமே.


இதைப் புரிந்து கொண்டால் நாமும் இயேசுவின் வழியில் நல்ல தலைவராக இருக்க முடியும்.

     


Comments

Post a Comment

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு