04/08/2023 புனித ஜான் மரிய வியான்னி
நம் வார்த்தையால் செய்கையால் ஒருவர் மனம்
நிம்மதி அடைகின்றது என்றால்
அதுவும் ஒரு வகை தர்மம் தான்.
நம் வார்த்தைகளால் செயல்களால் ஒருவரின் மனதை நிம்மதி அடையச் செய்கிறோமா? அல்லது புண்படுத்துகிறோம்?
இவ்வகை தருணத்தில் அதிகம் ஈடுபட்டவரே நம் புனித ஜான் மரிய வியான்னி. இயேசு தனது சொந்த ஊரில் உள்ள தொழுகை கூடத்தில் போதித்த போது, மக்கள் அவரை ஏழு கேள்விகளின் அடிப்படையில் பார்த்தார்கள்.
1. இயேசு தச்சரின் மகன் அல்லவா
2. இவருடைய தாய் மரியா என்பவர் தானே
3. இவர் சகோதரர்கள் யாக்கோபு யோசேப்பு சீமோன் யூதா அல்லவா
4. இவர் சகோதரர்கள் எல்லாம் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா
5. எப்படி இந்த வல்ல செயல்களை செய்கிறார்
6. இந்த ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது
7. பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தது
இவ்வாறு மக்கள் இயேசுவை பார்த்த பார்வையானது, மக்களின் இயல்பான பார்வையாகவே உள்ளது. பொதுவாக நாம் பிறரை அவர்கள் இருக்கும் விதத்தில் பார்க்காமல், நாம் எப்படி நினைக்கிறோமோ அவ்வாறு பார்க்க விரும்புவோம். இது அவர்களின் உண்மை தன்மையை நம் கண்களில் இருந்து மறைத்து விடுகிறது. இது உளவியல் பார்வை. அவ்வாறே இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களும் இயேசுவை முழுமையாக அறியாமல் போய்விட்டார்கள்.
எந்த ஒரு சமூகத்திலும் தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் என இரண்டு குழுவினர் இருப்பார்கள். இது சமுதாயத்தின் அநீதியான பார்வை.
இதையெல்லாம் கடந்து, இறைவன் நம் அனைவரையும் அவரது பிள்ளைகளாக பார்ப்பதும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை உணர்வதுமே இறைவனின் பார்வையாக உள்ளது. இந்த நிலையில் அனைவருமே சமம், எந்த ஒரு வேறுபாடும் இல்லை, அனைவருமே இறைவனின் பிள்ளைகள் என்பதை நம்மால் உணர முடியும்.
இவ்வாறு நாம் நமக்கு அடுத்து இருப்பவர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம் என்பதைக் கொண்டு இறைவன் நமது வாழ்வின் மறுபாதியை தீர்மானிக்கிறார் என்பதற்கு இன்றைய புனிதர் புனித ஜான் மரிய வியான்னி ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.
ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் நிலா எப்படி இருக்கிறது என்று கேட்ட பொழுது, பல மாணவர்கள் பல பதில்களைச் சொன்னார்கள், அதாவது நிலா சிறியதாக உள்ளது, நிலா வெள்ளையாக உள்ளது, நிலா தூரத்தில் உள்ளது, நிலா நமது பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்று பல்வேறு பதில்களை சொன்னார்களாம்.
ஆனால் நிலாவின் உண்மையான தன்மையை யாராலும் முழுமையாக விளக்க முடியவில்லை. அதுபோன்றே நாம் வாழும் வாழ்வின் தன்மையையும் முழுமையாக யாராலும் விளக்க முடியாது.
இந்த வாழ்வில் நம்மால் எடுத்துச் செல்ல முடியாத பொருள்களையும் செல்வங்களையும் சேர்ப்பதை விட, நம்மால் எப்பொழுதும் எடுத்துச் செல்லக்கூடிய பிறர் அன்பு, பிறருக்காக வாழ்வது போன்ற நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டால், நாம் நமது வார்த்தைகளாலும் செயல்களாலும் பிறரின் மனதை நிம்மதி அடையச் செய்ய முடியும். மேலும் அதுவே நாம் செய்யும் மிகப்பெரிய தர்மமாகவும் இருக்கும்.
இந்த தர்மத்தை செய்த இன்றைய புனிதர் புனித ஜான் மரிய வியான்னியின் வழியில் நாமும் நடப்போம். இறைவனின் அருள் நம்மை என்றும் வழிநடத்தும்.
Comments
Post a Comment