அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.



அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.


அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? பிலிப்பியர் 2: 1


பல ஆயிரம் மைல்கள் நடந்து, பல லட்சம் பேரை கிறிஸ்தவர்களாக மாற்றியவரே, புனித சவேரியார். இவர் செய்த நற்செய்தி பணியை, இவரை போல முழு ஈடுபாட்டோடு யாரும் செய்வது அரிது. இவரை மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலர் என்று திருஅவை அழைத்தது. இந்தப் புனிதருக்கு இணையாக, மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலராக, வெறும் நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து உயர்ந்தவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.


14 வயதில் கன்னியர் மடத்தில் சேர விரும்பும் ஒரு சிறுமி, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார். 25 ஆவது வயதை அடைவதற்கு முன்பே இறைவனடி சேர்ந்தார். இவர் ஒரு சிறுமியாக இருந்தாலும் கூட அவர் செய்த செயல்களை மிகப்பெரியவர்களால் செய்வது கடினம். யார் அந்த சிறுமி? அந்த சிறுமி செய்த சாதனைகள் தான் என்ன? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எலலாம்.


அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.


புனிதர் தெரேசா, தனது 14 ஆம் வயதில், கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894ல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார்.


எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.


படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார்


அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது:

“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது.”

என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.


அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது:


இதோ அப்பகுதி:

“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.”


கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார்.


தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார்.


எனவே, "உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும்". இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.


இதையே அவர் "சிறு வழி" என்று அழைத்தார். 1895 பிப்ரவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.


தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.


"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்து விடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்த பிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்பு செய்வதில் குறைபடுவதில்லை." என்ற சிந்தனை அவரது மனதில் ஆழமாக பதிந்தது. இவர் புனிதர் நிலைக்கு உயர இதுவும் ஒரு காரணமாக இருந்தது.


இன்றைய முதல் வாசகத்தில் பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக ஆண்டவர் மொழிந்ததை, இந்தப் புனிதை ஆழமாக பின்பற்றினார்.


இந்தப் புனிதை நமக்கு கற்றுத் தரும் பாடம்.


எண்ணங்கள்

இறையாட்சியை நோக்கி நீங்கள் பயணிக்கும் பொழுது எண்ணங்கள் மிக முக்கியம். உங்கள் தேவை எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதனை மட்டும் சிந்தையில் வைத்து நேர்மறை எண்ணத்தோடு செயல்படுங்கள்.


புறக்கணிப்பு

சிலர் உறவுகளையும், நட்புகளையும் புறக்கணித்து, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற ஒரே இலக்கோடு ஓடுகின்றனர். சற்று உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களை கவனிக்க தவறாதீர்கள். தன்னலம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கை அல்ல. உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.


உதவும் மனப்பான்மை

நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி ஓடும் பொழுது உங்கள் அருகில் இருக்கும் மனிதர்களையும் கவனிக்க தவறாதீர்கள். உங்கள் அருகிலேயே உதவி இன்றி வாழ்வில் முன்னேற துடிக்கும் பலரையும் உங்களால் காண முடியும். அவர்களையும் கவனியுங்கள். உங்கள் முன்னேற்றத்தோடு அவர்களும் முன்னேற வழி செய்து கொடுங்கள்.


ஆரோக்கியமான இலக்கு

உங்கள் வாழ்க்கைக்கான இலக்கு என்பது ஆரோக்கியமான இலக்காக இருக்க வேண்டுமே தவிர, எதிர்மறை எண்ணங்களோடு , சுயநல இலக்காக இருக்க கூடாது என்பதில் கவனமாய் இருங்கள்.


இன்றைய எதார்த்தம் 

நல்லவர்களை அடையாளம் காண வேண்டுமெனில்.. 

சில மோசமானவர்களை கடந்து தான் செல்ல வேண்டும்..

வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி, எல்லாரும் பார்ப்பது நம் ஸ்டேட்டஸ்தான்.

உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்துவிட்டாய் என்று கேட்டால், தைரியமாக சொல்லுங்கள், உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனைதான் என்று. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.


இந்த இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது 1 தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். மற்றவரோடு நம்மை ஒப்பிடும் போது இவை நமக்கு வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்


ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ பணமோ அல்ல அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும்தான் அழகு.


தாழ்வு மனப்பான்மையும், தலைக்கனம், இந்த இரண்டும் நம்மிடையே பிரிவுகளையும் வேறுபாடுகளையும் உண்டாக்கும் என்பதே ஐயமில்லை. இவ்வாறு பிரிந்து கிடந்த பிலிப்பு நகர மக்களுக்கு புனித பவுல் கூறுவதே இன்றைய இரண்டாம் வாசகமாக உள்ளது.


கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! என்ற அறிவுரையை தந்து, கிறிஸ்துவை போல் வாழ வேண்டும் என்ற அழைப்பை, அன்றைய பிலிப்பு நகர் மக்களுக்கும், இன்று வாழும் நமக்கும் தருகிறார் புனித பவுல்.


இறுதியாக


நாம் பார்ப்பது அனைத்தும் சரியென்று நினைத்து தவறான முடிவெடுப்பதும்.

இதற்குக் காரணியாக செயல்படுவதும் காட்சிப்பிழைதான்.


இதை நாம் திருத்திக் கொண்டால் வாழ்க்கை வளமாகும்.

நல்ல புரிதலுடன் இறுதிவரை தொடரும். முடியாது என்ற எண்ணத்தை தகர்த்திவிட்டால் போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும்.


கம்பீரம் என்பது உடல் அல்ல. செயல்.

கண்ணியம் என்பது பேச்சல்ல. நடத்தை.

கருணை என்பது உதவி அல்ல. அன்பு.

கடவுள் இருப்பது வெளியே அல்ல.

உள்ளே.


பேச்சை விட மெளனமே சிறந்தது.

பேசித்தான் தீரவேண்டும் என்றால்.


அந்தப் பேச்சு உண்மையாய் நேர்மையாய் இனிமையாய் இருக்கட்டும்.


வாழ்க்கையில் இயேசுவைப் போல் வாழ வேண்டும் என்றால்.


பல துன்பங்களையும்,

அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் அதனால் கிடைக்கும் பலன் மிகப் பெரிது.


லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசாவின் வழியில் நடந்தால், எளிதாக நாமும் இறையாச்சிக்கு உட்பட முடியும்.

Comments

Popular posts from this blog

Saint of the Day † (May 15) ✠ St. Sophia of Rome