( செப்டம்பர் 16 )
புனிதர்கள் கொர்னேலியுஸ்,சிப்ரியான்
மூன்றில் ஒரு பகுதியினராக இருந்த கிறிஸ்தவர்களை அழிப்பதற்கென ஆணை பிறப்பித்த அரசர் தீசீயுஸ் (249-251) ஏழாம் மறைக்கலகத்தை தொடங்கி வைத்தான். கிறிஸ்தவர்கள் என சந்தேக வலைக்குள் சிக்கியவர்கள் தலைமை அதிகாரியிடம் சென்று சிலைகளுக்கு வணக்கம் செலுத்தி தாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அரச சாசனத்தில் குறிப்பிட்டான்.
கிறிஸ்தவ மறையை புறக்கணிக்க மறுத்து விசுவாசத்தில் ஊன்றி நின்ற பலர் இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்கள். ஒரு சிலர் துன்பத்திற்கு அஞ்சி சிலைகளுக்கு வணக்கம் செலுத்தினார்கள். இந்த மறைக்கலகத்தில் தான் திருத்தந்தை பபியான் 250, ஜனவரி 20 அன்று இறந்தார்.
பபியானுக்குப் பிறகு, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுத்துவிட்டால் கிறிஸ்தவம் அழிந்து விடும் என்று கருதிய தீசியுஸ் புதிய திருத்தந்தைக்கான தேர்தலைத் தடைசெய்தான். 14 மாதங்களுக்குப் பிறகு தீசியுஸ் வெளியேறிய பின்பு சற்று அமைதி திரும்பிய நிலையில் திருத்தந்தை தேர்தல் நடைபெற்றது.
பபியானுக்கு அடுத்த நிலையில் இருந்த மோசஸ் என்பவர் இறந்துவிட்டதால் தாம் நிச்சயமாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று உரோமை மறைமாவட்ட குரு நொவேற்றஸ் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்பொறுப்பிற்குத் தாம் தகுதி இல்லை என்று கூறி மறுப்புத் தெரிவித்த கொர்னேலியுஸ் 21ஆவது திருத்தந்தையாக 251 மார்ச் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்ற கோபத்தில் இருந்த நொவேற்றஸ் திருச்சபைக்குள் சிக்கலை உண்டாக்க ஆரம்பித்தார். தீசியுஸ் மறைக்கலகத்தின்போது உயிருக்கு அஞ்சி கிறிஸ்தவத்தை மறுதலித்த பலர் மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் வர விரும்பினார்கள். "இவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று அதற்கான ஒறுத்தல் முயற்சிகள் செய்தார்கள் என்றால் கிறிஸ்தவத்திற்குள் சேர்த்துக்கொள்ளலாம்” என்று திருத்தந்தை கொர்னேலியுஸ் தெரிவித்தார். கார்த்தேஜ் ஆயர் சிப்ரியானும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனைக் கையில் எடுத்துக்கொண்ட நொவேற்றஸ், “கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்கள் மறுபடியும் திருமுழுக்குப் பெற்றுத்தான் கிறிஸ்தவர்களாக முடியும்” என்று பேச ஆரம்பித்தார். தமக்கான ஆதரவாளர்களைத் திரட்டினார். சில நாட்களுக்குப் பிறகு தம்மைத் திருத்தந்தையாகவும் அறிவித்தார். போட்டித் திருத்தந்தை ஆனார். மேலும், “கனமான பாவங்களை மன்னிக்க ஆயர்களுக்கு அதிகாரம் இல்லை. அது கடைசி தீர்ப்பின் போதுதான் மன்னிக்கப்பட வேண்டும்” என்று போதிக்கத் தொடங்கினார்.
இந்த களோபரங்களுக்கு மத்தியில் 251இல் கார்த்தேஜில் ஆயர் மன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. அம்மன்றம் நொவேற்றஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரையும் திருச்சபையில் இருந்து புறம்பாக்கியது.
தீசியுஸ் 251இல் போரில் கொல்லப்பட்ட பிறகு திரிபோனியானுஸ் என்பவன் பேரரசன் ஆனான். இவனும் 252 ஜூன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மறைக்கலகத்தைத் தொடங்கினான். திருத்தந்தை கொர்னேலியுஸை இத்தாலியில் உள்ள செந்தும்செல்லே பகுதிக்கு தூக்கிக்கொண்டு போனான். அங்கே 253ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொர்னேலியுஸ் மறைசாட்சியாக இறந்தார்.
பிந்தைய ஆய்வுகளின்படி இவர் தலை வெட்டப்பட்டு இறந்திருக்கலாம் என்று அறிய முடிகிறது. இவர் திருத்தந்தையரின் ஆலயத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அந்தக் கல்லறையில் மறைசாட்சியான கொர்னேலியுஸ் என்று எழுதப்பட்டிருந்தது.
சிப்ரியான் வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் நகரில் ஏறத்தாழ கி.பி. 210-ஆம் ஆண்டில் கிறிஸ்தவரல்லாதார் குடும்பத்தில் பிறந்தார். திருமறைக்கு மனந்திரும்பி மறைப்பணியாளராகி 249-ஆம் ஆண்டில் தம் சொந்த நகருக்கே ஆயராகத் திருப்பட்டம் பெற்றார். பேரிடர்கள் நிறைந்த அக்காலத்தில் சிறந்த சாதனைகளாலும் நயமான நூல்களாலும் தம் திருச்சபையைத் திறம்பட ஆண்டுவந்தார். கிறிஸ்தவர்களை வலேரியான் அடக்கி ஒடுக்கிய காலத்தில், புனிதர் முதலில் தண்டனையாக நாடு கடத்தப்பட்டார். பின்பு, 258-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 16-ஆம் நாள் கார்த்தேஜிலேயே மறைச்சாட்சியாக இறந்தார்.
Comments
Post a Comment