பொதுக்காலம் 24ம் ஞாயிறு

17/09/2023


மன்னிப்பு இரத்தத்தில் கலக்க வேண்டும்


நீரில் மூழ்கி இறக்கப் போகும் தேளை காப்பாற்றிய முனிவரை கடித்தது தேள், சீடர் கேட்டார் தேள் கொட்டுகிறது அதை அப்படியே விட்டு விடுங்கள் என்று, அந்த முனிவர் சொன்னார் கொட்டுவது தேளின் இயல்பு, காப்பாற்றுவது எனது இயல்பு.


நாம் அன்றாட சொல்லும் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபத்தில், ஒரு பகுதி பின்வருமாறு; எங்களுக்கு எதிராக குற்றம் செய்பவரே நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.


உளவியலில் கூறும் 21 நாட்கள் பழக்கமானாலும் சரி, பேதுரு கூறும் முழுமையாகி ஏழு முறை மன்னிப்பானாலும் சரி, காட்டும் பாதை ஒன்றுதான், நாம் பிறரை முழு மனதுடன் மன்னிக்க வேண்டும்.


அன்னை தெரசா அருமையாக கூறியிருந்தார், "பிறரை குற்றம் காணத் தொடங்கினால் எனக்கு அவர்களை அன்பு செய்ய நேரமே இருக்காது"


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில், மிக முக்கிய வேறுபாடானது, மனிதர்களால் பிறரை மன்னிக்க முடியும். மனிதனிடத்தில் கடவுள் கொடுத்த இன்றியமையாத ஒரு பண்புதான் இந்த மன்னிப்பு.


 பூ வில் சிறந்த பூ மரப்பு, மன்னிப்பு, சிரிப்பு.


இரண்டு உலகப் போர்களை கண்ட இந்த உலகம், அமைதியைத் தேடி ஓட தொடங்கியது. ஆனாலும், மன்னிக்காமல் பகையை உள்ளே வைத்துக் கொண்டே ஓடத் தொடங்கியது. அதன் விளைவாக எப்பொழுது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப்போர் வந்துவிடலாம் என்ற அச்சம் நம்மை சூழ்ந்து இருக்கிறது.


என்னிடம் ஒரு நபர் சொன்னார், 15 வருடங்களாக நானும் எனது உறவினருள் ஒரு குடும்பமும் பேசிக்கொள்வதில்லை என்று. இத்தனைக்கும் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மன்னிக்க இயலவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சர்யம் அல்ல மிகப் பெரிய ஆபத்து.


ஆக உள்ளூர் முதல் உலகம் வரை மன்னிப்பு என்பது மறக்கப்பட்டு வருகிறது. 


இந்த மன்னிப்பு மறக்க படுவதற்கு காரணம், இன்றைய உலகில் அனைத்துமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடு[ use and throw culture ]என்ற கலாச்சாரம் வளர்ந்து கொண்டிருப்பது ஆகும்.


சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த பொழுது கூட இயேசு விரும்பியது, மக்களின் மீட்புக்கான மன்னிப்பு. இலவசமாக பெற்றுக்கொண்ட நம்மால் ஏன் அதை பிறருக்கு கொடுக்க முடியவில்லை? என்பது இன்றைய எதார்த்த சவால்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் உவமையின் பின்னணியில் கடவுளே அரசர், நாம் நமது பாவங்களால், அவரிடம் 10,000 தாலந்து கடன் பட்ட நபர்கள். சிலுவையில் இயேசு இறக்கும் பொழுது நமது கடன்கள் என்னும் அடைக்க முடியாத பாவத்தை முழுமையாக விலக்கி விட்டார். ஆனால் நம் உடன் இருக்கும் நட்புகளோ உறவுகளோ நமக்கு எதிராக பாவம் செய்யும் பொழுது அந்த நூறு தெனாரியத்தை மன்னிக்க முடியாதவர்களாக நின்று கொண்டிருக்கிறோம்.


இதிலிருந்து புதிய வழியை, புதிய நெறியை நம் தலைவர் இயேசு காட்டுகிறார். ஏழு முறை மட்டுமல்ல 70 தடவை ஏழு முறை மன்னிக்க வேண்டும் என்று.


திருப்பாடல் ஆசிரியர் அழகாக கூறியுள்ளார், "ஆண்டவரே நீர் எங்கள் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்க முடியும்" என்று.


இன்று ஆண்டவரின் மன்னிப்பு இல்லாமல் நாம் இல்லை, நமது மன்னிப்பு இல்லாமல் நமக்கு நல்வாழ்வு இல்லை.


ஒப்புரவு அருள்சாதனத்தில் ஒரு அருள்பணியாளர் கூறியது, உனது பாவங்களுக்கு பரிகாரமாக 100 பேர் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று.


மன்னிப்பு என்பது வெளியில் இருந்து புகுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கக் கூடாது. இறைவனின் அன்பை சுவைத்த நமது உள்ளத்திலிருந்து எழக்கூடிய ஊற்றாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் வாழ்க்கை இனிமையாகும்.


இன்றைய முதல் வாசகத்தில், 'வெகுளி, சினம் ஆகியவை வெறுப்புக்குரியவை' என மொழிகிற ஆசிரியர், நாம் மன்னிப்பதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் அன்பு செய்வதற்கும் மூன்று காரணங்களைத் தருகின்றார்: (அ) பழிவாங்குவோர் ஆண்டவரின் பழியைப் பெறுவர். மன்னிப்போர் ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவர். (ஆ) மன்னிப்பவருடைய மன்றாட்டுகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. (இ) நம் வாழ்வின் முடிவை நாம் மனத்தில் கொண்டவர்களாக வாழ்தல்.


இரண்டாம், வாசகத்தில், நாம் இருந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறக்கிறோம் என்கிறார் பவுல். ஆண்டவருக்கென்றே வாழ்கிற நாம் அவரைப் போல வாழ்வதற்கான ஒரு வழியே இரக்கம் காட்டுதல்.


இறுதியாக


இறக்கத் தானே பிறந்தோம் இரக்கத்தோடு இருப்போம். 




Comments

Popular posts from this blog