பொதுக்காலம் 25 வது ஞாயிறு


நீதியும் இரக்கமும் உள்ள தலைவர்.


இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரின் பண்பு நலன்களையும், அவரது இயல்பைப் பற்றியும் எடுத்துரைப்பதாக உள்ளது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரைத் தேட வேண்டும் என்பதை, இறைவாக்கினர் ஏசாயா வழியாக இறைவன் தரும் செய்தியாக உள்ளது. இரண்டாம் வாசகத்திலும் கூட புனித பவுல் நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே என்று ஆண்டவரை நோக்கி தான் செல்வதில் மகிழ்ச்சி அடைவதை, தனது வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணக தந்தையின் இயல்பை ஒரு உவமை வழியாக வெளிப்படுத்துகிறார். கடைசியானோர் முதன்மையாக முதன்மையானோர் கடைசியாக, என்ற வார்த்தையோடு நிறைவாகும் இன்றைய நற்செய்தி. இறையாட்சிக்கு உட்பட்ட அனைவருமே இறைவனின் பார்வையில் சமம் என்பதையும், அதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் முதன்மையானோர் கடைசியானோர் என்ற வேறுபாடு இல்லை என்பதையும் அழகாக இன்று நமக்கு கற்றுத் தருகிறது.


ஆனால் நாம் வாழும் இந்த உலகத்தில் மட்டும் ஏன் இத்தனை வேறு பாடுகள். செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பாகுபாடு, படித்தவர் படிக்காதவர் இடையே உள்ள பாகுபாடு, முதலாளி தொழிலாளி இடையே உள்ள பாகுபாடு, நிற அடிப்படையில் உள்ள பாகுபாடு, நமது இந்தியச் சூழலில் சாதிய அடிப்படையிலான பாகுபாடு. இவ்வாறு எண்ணிலடங்கா வேறுபாடுகளை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இறைவனின் பார்வையில் நாம் அனைவருமே சமம் அனைவருமே அவரது பிள்ளைகள் அனைவருமே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.


இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்கள் மீது இரக்கம் காட்டுவதில் வல்லவராகவும் அவர்களை மீட்டெடுப்பதில் நல்லவராகவும் இருக்கிறார்.


இந்தச் சூழலில் நாம் இறைவன் எவ்வாறு தனது நீதியினாலும் இரக்கத்தினாலும் நம்மை அரவணைத்து வருகிறார் என்பதை அறிந்து, அவரது பாதையில் நாமும் வாழ வேண்டும் என்பதே இன்றைய வாசகங்கள் நமக்கு கற்றுத் தரும் மைய செய்தியாக உள்ளது.


திருச்சபை சட்ட நூலில் இறுதிச் சட்டமாக இருப்பது, "அனைத்து ஆன்மாக்களின் மீட்பு". ஆக, திருத்தந்தையானாலும் சரி, ஆய ரானாலும் சரி, குருவானவரானாலும் சரி, இறைவனில் நம்பிக்கை கொண்ட மக்களானாலும் சரி, இறைவனை நற்கருணை வடிவில் பெரும் நாம் அவராக செயலாற்ற வேண்டும், அதுவும் அவரைப்போல நீதியும் இரக்கமும் உள்ளவர்களாக செயலாற்ற வேண்டும் என்பதே இன்றைய வாசகங்கள் நமக்கு தரும் செய்தியாக உள்ளது.


ஒருவேளை நாம் செய்யும் வேலைகளில், நாமும் நீதியோடு மட்டுமல்லாமல் இரக்கத்தோடு செயல்பட முடிகிறது என்றால், இன்று நாமும் இறைவனாக செயல்பட முடியும். அவ்வாறு செயல்பட நமக்கு அடக்கமும் தாழ்ச்சியும் அவசியம். இந்த இரண்டு பண்பு நலன்களை இறைவன் நமக்கு தர இந்த திருப்பலியில் தொடர்ந்து இறைவனிடம் சிறப்பாக வேண்டுவோம்.


குறள் 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.


பொருள்:  

அடக்கம் நமக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது நமக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு