இன்றைய புனிதர் † (மார்ச் 1) ✠ புனிதர் டேவிட் ✠ (St. David of Wales)

 † இன்றைய புனிதர் †

(மார்ச் 1)



✠ புனிதர் டேவிட் ✠

(St. David of Wales)


ஆயர்:

(Bishop)


பிறப்பு: கி.பி. சுமார் 500

கேர்ஃபை, பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ்

(Caerfai, Pembrokeshire, Wales)


இறப்பு: மார்ச் 1, 589

செயின்ட் டேவிட்'ஸ், பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ்

(St. David's, Pembrokeshire, Wales)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்க ஒன்றியம்

(Anglican Communion)


முக்கிய திருத்தலங்கள்:

புனிதர் டேவிட் பேராலயம், பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ்

(St. David's Cathedral, Pembrokeshire, Wales)


நினைவுத் திருநாள்: மார்ச் 1


பாதுகாவல்:

வேல்ஸ் (Wales)

பெம்ப்ரோக்ஷைர் (Pembrokeshire)

புலால் உண்ணாதவர்கள் (Vegetarians)

கவிஞர்கள் (Poets)

அயர்லாந்திலுள்ள நாஸ் (Naas in Ireland)


புனிதர் டேவிட், ஆறாம் நூற்றாண்டின் "மினிவ்" (Mynyw) மறை மாவட்டத்தின், (தற்போதைய “செயின்ட் டேவிட்ஸ்” (St Davids) ஆயர் ஆவார். இவர் வேல்ஸ் மாநிலத்தின் பாதுகாவலரும் ஆவார்.


மரபுகளின்படி, இவர் பிரிட்டிஷ் நாட்டின் புனிதர்களில் மிகவும் பிரபலமான புனிதர் “நான்” (Saint Non) என்பவரது மகனும், “செரேடிகியோன்” (Ceredigion) நாட்டின் அரசனான “செரேடிக் அப் குநேட்டா” (Ceredig ap Cunedda) என்பவரின் பேரனும் ஆவார்.


மத குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், மறை போதனை செய்வதில் வல்லவராக இருந்தார். இவர் துறவற மடங்கள் பலவற்றை நிறுவினார். தமது தலைமை துறவற மடத்தினை 'வேல்ஸ்' மாநிலத்தின் தென்மேற்குப் (Southwestern Wales) பிராந்தியத்தில் நிறுவினார். அவரது அன்றாட வாழ்க்கையின் ஒழுங்கு முறைகள் மிகவும் கடினமானதாயும் தீவிரமானதாகவும் இருந்தன என்பர். அவர் தமது அன்றாட உணவை தினமும் நகருக்குள் சென்று பிச்சை எடுத்தே உண்டார். அதன் பொருட்டு, கைவண்டியை எருதுகளின் அல்லது குதிரைகளின் உதவியின்றி தாமே இழுத்துச் செல்வார். மிகவும் சாதாரணமாக, உப்பு மட்டுமே சேர்க்கப்பட்ட ரொட்டியும் நீரும் மட்டுமே அருந்தினார். புலால் உண்பதை கண்டிப்பாக தவிர்த்தார். மாலை வேளைகளில் செபிப்பதுவும், புத்தகங்களைப் படிக்கவும் எழுதவுமே செய்தார். தமக்காக எந்தவொரு பொருளையும் வைத்துக்கொள்ளவில்லை. "என்னுடைய புத்தகம்" என்று சொல்வதைக்கூட குற்றமாக கருதினார். தமது துறவற மடங்களில் தங்கியிருந்து தம்மைப் பின்பற்றிய துறவியரும் அவரைப்போன்றே கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார்.


டேவிட் ஒருமுறை, "ல்லன்டேவி" (Llanddewi) என்றோர் கிராமத்திலே பெரும் மக்கள் மற்றும் துறவியர் கூட்டத்தினரிடையே மறை போதனை செய்து கொண்டிருந்த போது, அவர் நின்றிருந்த பூமி, ஒரு குன்று போல் உயர்ந்ததாகவும், ஒரு வெண்புறா அவரது தோளில் வந்தமர்ந்ததாகவும் கூறுகிறார்கள். இது, டேவிடின் துறவு வாழ்க்கையில் நடந்த பெரும் அதிசயங்களில் ஒன்று என கூறப்படுகின்றது.


இவர் மரித்தது, ஒரு மார்ச் மாதத்தின் முதல் தேதி, செவ்வாய்க் கிழமை என்று கூறப்படுகிறது. வேல்ஸ் மாநிலத்தின் தென் பிராந்தியத்தில் ஐம்பது தேவாலயங்கள் புனிதர் டேவிட் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.


கிறிஸ்து அவரது ஆன்மாவைப் பெற்றுக்கொண்டதன் மூலம், துறவுமடம் சம்மனசுக்களால் நிரம்பப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு