இன்றைய திருவிழா † (மார்ச் 25) ✠ இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு ✠ (Annunciation of the Lord)
† இன்றைய திருவிழா †
(மார்ச் 25)
✠ இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு ✠
(Annunciation of the Lord)
திருவிழா நாள்: மார்ச் 25
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-38ல் உள்ளபடி கபிரியேல் தேவதூதர், கன்னி மரியாளுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதனை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போதே மரியாளிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும், திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாளிடம் எடுத்தியம்பினார். மரியாளின் உறவினராகிய எலிசபெத்தும் தமது முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்தார்.
பல கிறிஸ்தவ பிரிவுகள் இந்நிகழ்வை மார்ச் 25ம் நாளன்று கொண்டாடுகின்றனர். இது இயேசு பிறப்புக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் என்பதுவும் இது இயேசுவின் பாடுகளின் காலத்தில் நிகழ்கின்றது என்பதும் குறிக்கத்தக்கது. இத்தேதியினை முதன் முதலில் இவ்விழாவுக்கென கொண்டவர் இரனேயு (காலம்.130-202) ஆவார்.
முக்காலத்தில் சம இரவு-பகல் நாளினை ஒட்டி இவ்விழா நிகழ்ந்ததால், இது புத்தாண்டாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையினரால் இந்நிகழ்வு முன்னறிவிப்பு பேராலயத்தில் நடந்ததாக நம்பப்படுகின்றது. ஆயினும் பிற கிறிஸ்தவ சபைகளிடையே இது குறித்த ஒத்த கருத்தில்லை.
கத்தோலிக்க திருச்சபையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் முதல் மறைபொருள் ஆகும்.
Comments
Post a Comment