இன்றைய புனிதர் (மார்ச் 27) ✠ சல்ஸ்பர்க் மாநில புனிதர் ரூபர்ட் ✠
இன்றைய புனிதர்
(மார்ச் 27)
✠ சல்ஸ்பர்க் மாநில புனிதர் ரூபர்ட் ✠
மடாதிபதி மற்றும் ஆயர்:
பிறப்பு: கி.பி. 660
இறப்பு: மார்ச் 27, 710
சல்ஸ்பர்க், ஆஸ்திரியா
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
நினைவுத் திருநாள்: மார்ச் 27
பாதுகாவல்:
சல்ஸ்பர்க் மாநிலம், ஆஸ்திரியா, உப்பு சுரங்க பணியாளர்
சல்ஸ்பர்க் மாநில புனிதர் ரூபர்ட், "வோர்ம்ஸ்" மறைமாவட்ட ஆயரும், "சல்ஸ்பர்க்" மறை மாவட்டத்தின் முதல் ஆயரும், "சல்ஸ்பர்க்" புனிதர் பீட்டர் துறவு மடத்தின் மடாதிபதியும் ஆவார். இவர், "ஃப்ராங்க்ஸ்" அரசன் "மூன்றாம் சைல்டபர்ட்டின்" சம காலத்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும், ஆஸ்திரிய மாநிலம் "சல்ஸ்பர்கின்" பாதுகாவலரும் ஆவார்.
தூய பாரம்பரியங்களின்படி, ரூபர்ட் "பிரான்கிஷ் மெரோவிஞ்சியன்" அரச குடும்பத்தின் வழித்தோன்றலாவார். ஆரம்பத்தில், பாண்டித்தியமும் பக்தியுமுள்ள ஆயராக ரூபர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், இறுதியில் 'பாகனிஸ' எதிர்ப்பாளர்கள் ரூபர்ட்டை நிராகரித்தனர். அவரை "வோர்ம்ஸ்" நகரை விட்டு வெளியேறுமாறு பலவந்தப்படுத்தினர்.
"பவரியாவின் பிரபு தியோடோ" ரூபர்ட்டை பவரியா வந்து கத்தோலிக்கத்தை பரப்ப்புவதில் உதவி செய்யுமாறு வேண்டினார்.
ரூபர்ட் "அல்டோட்டிங்" எனுமிடத்திற்கு சென்றார். அங்கே உள்ளூர் மக்களை கத்தோலிக்கத்திற்கு மனம் மாற்றினார். "டனூப்" ஆற்றில் பயணித்து அநேக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார். விரைவிலேயே "ஆவார்ஸ்" எனும் "கௌகாஸிய" இனத்தவர் அரசாண்ட "டனூப்" நதியின் தென்கரையோரமுள்ள "பன்னோனியன்" நிலப்பகுதிகளில் கத்தோலிக்க மறையை பரப்பினார்.
"ஆவார்" பிரதேசங்களில் உண்டான போர் சூழல், ரூபர்ட்டை தமது மறைப்பணியின் திட்டங்களை கைவிட செய்தன. அதற்கு பதிலாக, அவர் பாழ்பட்டுப் போன ரோம நகரான "ஜுவாவும்" சென்றார். அந்நகரை தமது தளமாக ஆக்கிகொண்ட ரூபர்ட், நகரின் பெயரை "ஸல்ஸ்பர்க்" என்று மாற்றினார். ஏற்கனவேயிருந்த பண்டைய கிறிஸ்தவ பாரம்பரியங்களை கட்டமைத்தார். புனிதர் பீட்டரின் துறவு மடத்தினை புனரமைத்தார். "ஸல்ஸ்பர்க்" பேராலயம் கட்டுவதற்கான அடித்தளங்களை உண்டாக்கினார். அது, பின்னர் அவரது பின்வந்த ஆயரான "வெர்ஜிலியசின்" காலத்தில் நிறைவுற்றது. "நொன்பர்க்" என்னுமிடத்தில் அருட்சகோதரியருக்கான "பெனடிக்டைன்" துறவு மடத்தினை நிறுவினார். அம்மடத்தின் முதல் மடாதிபதி அவரது மருமகள் "புனிதர் எரேன்ட்ரூட்" ஆவார்.
ரூபர்ட் கல்வி மற்றும் அநேக பிற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். "பவரியாவின் பிரபு தியோடோ" அவர்களிடமிருந்து "பிடிங் மற்றும் ரெய்சென்ஹல்" ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள தோட்டங்களை தானமாகப் பெற்றார். அங்கே, அவர் உள்ளூர் உப்புப் பணிகளை மேம்படுத்தினார்.
கி.பி. 710ம் ஆண்டு, மார்ச் மாதம், 27ம் நாளன்று ரூபர்ட் மரித்த தினம், கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு பெருவிழா தினம் என்று கூறப்படுகின்றது.
Comments
Post a Comment