இன்றைய புனிதர் † (ஏப்ரல் 28) ✠ புனிதர் லூயிஸ் டி மோன்ட்ஃபோர்ட் ✠ (St. Louis de Montfort)

 † இன்றைய புனிதர் †

(ஏப்ரல் 28)



✠ புனிதர் லூயிஸ் டி மோன்ட்ஃபோர்ட் ✠

(St. Louis de Montfort)


எழுத்தாளர், குரு, ஒப்புரவாளர்:

(Author, Priest and Confessor)


பிறப்பு: ஜனவரி 31, 1673

மான்ட்ஃபோர்ட்-சுர்-மியூ, ஃபிரான்ஸ்

(Montfort-sur-Meu, France)


இறப்பு: ஏப்ரல் 28, 1716 (வயது 43)

செயிண்ட்-லாரன்ட்-சுர்-சாவ்ரே

(Saint-Laurent-sur-Sèvre)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திப்பேறு பட்டம்: கி.பி 1888

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ

(Pope Leo XIII)


புனிதர் பட்டம்: ஜூலை 20, 1947

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)


நினைவுத் திருநாள்: ஏப்ரல் 28


செயின்ட் லூயிஸ் டி மான்ட்ஃபோர்ட் ஒரு ஃபிரெஞ்சு ரோமன் கத்தோலிக்க குருவும், ஒப்புரவாளரும் ஆவார். அவர் வாழ்ந்திருந்த காலத்தில், ஒரு போதகராக அறியப்பட்ட அவர், திருத்தந்தை பதினோராம் கிளெமென்ட் அவர்களால் ஒரு மிஷனரி அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டார்.


பிரசங்கிக்கவும், போதிக்கவும் செய்திருந்த இவர், பல்வேறு புத்தகங்கள் எழுதவும் நேரம் ஒதுக்கினார். அவர் எழுதிய புத்தகங்கள், பண்டைய கத்தோலிக்க தலைப்புகளாகவும் மாறின. மற்றும், அவை திருத்தந்தையர் பலரின் செல்வாக்கினையும் பெற்றன. ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் மீதான அவரது குறிப்பிட்ட பக்தியும், மற்றும் ஜெபமாலை ஜெபிக்கும் அவரது வழக்கத்திற்காகவும் மான்ட்ஃபோர்ட் பிரபலமானார்.


அன்னை மரியாளை பற்றின இறையியல் (Mariology) துறையின் ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவராக மான்ட்ஃபோர்ட் கருதப்படுகிறார். அன்னை கன்னி மரியாளின் மீதான பக்திகளைப் பற்றிய அவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகள், "ஜெபமாலை ஜெபித்தலின் இரகசியம்" (The Secret of the Rosary) மற்றும் "மரியாளின் மீதான உண்மையான பக்தி" (True Devotion to Mary) ஆகியனவற்றினை உள்ளடக்கியவையாகும்.


ரோமன் கத்தோலிக்க திருச்சபை, திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்களால், கி.பி. 1947ம் ஆண்டு, ஜூலை மாதம், 20ம் நாளன்று, மான்ட்ஃபோர்டை புனிதராக அருட்பொழிவு செய்தது. "கியாகோமோ பாரிசினி" (Giacomo Parisini) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு "நிறுவனர்கள் சிலை" தூய பேதுரு பேராலயத்தில் தெற்கு பீடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.


இவர், கி.பி. 1673ம் ஆண்டு, "மான்ட்ஃபோர்ட்-சுர்-மியூ' (Montfort-sur-Meu) நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர், "ஜீன்-பாப்டிஸ்ட்" (Jean-Baptiste) ஆகும். இவரது தாயாரின் பெயர், "ஜீன் ராபர்ட் கிரிக்னியன்" (Jeanne Robert Grignion) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த பதினெட்டு குழந்தைகளில், இவர் மூத்த குழந்தை ஆவார். அவரது தந்தை, பத்திரங்களுக்குச் சட்டபூர்வ அங்கீகாரமளிக்கும் ஒரு வழக்கறிஞர் - நோட்டரி (Notary) ஆவார். லூயிஸ்-மேரி தனது குழந்தை பருவத்தையும், சிறுவர் பருவத்தையும், மான்ட்ஃபோர்டிலிருந்து (Montfort) சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள "இஃபெண்டிக்" (Iffendic) நகரில் கழித்தார். அங்கு அவரது தந்தை ஒரு பண்ணை வாங்கினார். தனது 12 வயதில், ரென்னஸில் (Rennes) உள்ள "செயின்ட் தாமஸ் பெக்கட்டின்" (Jesuit College of St Thomas Becket) இயேசுசபை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மாமா ஒருவர், பங்குத் தந்தையாக இருந்தார்.


ரென்னஸில் உள்ள செயின்ட் தாமஸ் (St Thomas in Rennes) பள்ளியில், தனது சாதாரண படிப்பின் முடிவில், அவர் தத்துவம் மற்றும் இறையியல் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கினார். வேறு சில குருக்களின் வழிகாட்டுதலின் கீழ், அவர் ஏழைகளிடையே மறைப்பணிகளை பிரசங்கிக்க தூண்டப்பட்டார். மேலும், அவர் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை கன்னி மரியாள் மீதான தனது வலுவான பக்தியை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார்.


கி.பி. 1693ம் ஆண்டின் இறுதியில், புகழ்பெற்ற செயிண்ட்-சல்பைஸின் கருத்தரங்கில் (Seminary of Saint-Sulpice) படிப்பதற்காக பாரிஸ் (Paris) நகருக்குச் செல்ல அவருக்கு ஒரு பயனாளி மூலம் வாய்ப்பு கிட்டியது. அவர் பாரிஸுக்கு வந்தபோது, அவரின் பயனாளி அவருக்கு போதுமான பணம் வழங்கவில்லை என்பதை அறிந்துகொண்டார். எனவே அவர் அடுத்தடுத்து பயணிகள் தாங்கும் இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். மிகவும் ஏழைகள் மத்தியில் வாழ்ந்தார். இதற்கிடையில் சோர்போன் பல்கலைக்கழகத்தில் (Sorbonne University) இறையியல் விரிவுரைகளுக்கும் சென்றார். இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பிறகு, அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டியிருந்தது. இரத்தக் கசிவு நோய்க்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவமனையில் இருந்து வெளிவந்ததும், ஃபிரென்ச் கத்தோலிக்க குருவான "ஜீன்-ஜேக்குவஸ் ஒலியர்" (Jean-Jacques Olier) அவர்களால் நிறுவப்பட்ட, "லிட்டில் செயிண்ட்-சல்பைஸ்" (Little Saint-Sulpice) அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததை அறிந்து ஆச்சரியமுற்றார். அவர் ஜூலை 1695ல் பிரவேசித்தார். அங்கே அவர் நூலகராக நியமிக்கப்பட்டதால், செயிண்ட்-சல்பிஸில் அவர் இருந்த காலத்தில், ஆன்மீகம் மற்றும் குறிப்பாக கிறிஸ்தவ வாழ்க்கையில் அன்னை கன்னி மரியாளின் இடத்தைப் பற்றிய கிடைக்கக்கூடிய பெரும்பாலான படைப்புகளைப் படிக்க அவருக்கு வாய்ப்பளித்தது. இது, பின்னர் புனித ஜெபமாலை ஜெபிப்பதிலும், மற்றும் அவரது புகழ்பெற்ற புத்தகமான, "ஜெபமாலையின் இரகசியம்" (Secret of the Rosary) ஆகியவற்றில் கவனம் செலுத்த வழிவகுத்தது.


கி.பி. 1700ம் ஆண்டு, ஜூன் மாதம், குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், ஃபிரான்ஸ் நாட்டின் நகரான "நாந்தேஸ்" (Nantes) நகருக்கு அனுப்பப்பட்டார். கனடா நாட்டின் "புதிய பிரெஞ்சு காலனி" (New French colony of Canada) ஆகிய வெளிநாட்டு பகுதிகளுக்கு மறைப்பணி பயணங்களுக்குச் செல்வதே அவரது பெரும் விருப்பமாக இருந்தது. ஆனால் அவரது ஆன்மீக இயக்குனர் அதற்கு எதிராக அறிவுறுத்திய காரணத்தால், அவரால் அது இயலாமல் போனது. இந்த காலகட்டத்தின் அவரது கடிதங்கள், பிரசங்கிக்க வாய்ப்பில்லாததால் அவர் விரக்தியடைந்ததைக் காட்டுகிறது.


கி.பி. 1700ம் ஆண்டு, நவம்பர் மாதம், டொமினிக்கன் மூன்றாம் சபையில் இணைந்த இவர், ஜெபமாலை பிரசங்கிக்க மட்டுமல்லாமல், ஜெபமாலை குழுக்களையும் உருவாக்க அனுமதி கேட்டார். ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் மதிப்பு, மற்றும் பாதுகாப்பின் கீழே, மறைப்பணிகள் மற்றும் தியானங்களைப் பிரசங்கிக்க சிறு சிறு குருக்களின் அமைப்புகளைத் தொடங்க அவர் பரிசீலிக்கத் தொடங்கினார். இது இறுதியில் (The Missionaries of the Company of Mary) எனும் மறைப்பணி சபை நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது. இந்த நேரத்தில், அவர் மத்திய மேற்கு ஃபிரான்ஸ் நாட்டின், போய்ட்டியர்ஸ் (Poitiers) நகரின் மருத்துவமனையின் சிற்றாலய குருவாக நியமிக்கப்பட்டார். முதலில் அவர் அருளாளர் "மேரி லூயிஸ் டிரிச்செட்"டை (Blessed Marie Louise Trichet) சந்தித்தார். அந்த சந்திப்பு மேரி லூயிஸின் 34 ஆண்டு ஏழைகளுக்கான சேவையின் தொடக்கமாக அமைந்தது. 


திருத்தந்தை பதினோராம் கிளமென்ட் (Pope Clement XI) அவர்களிடம், தாம் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனை கேட்பதற்காக இவர், ரோம் நகர் பயணித்தார். இவரது உண்மையான மறைப்பணிகளை அங்கீகரித்த திருத்தந்தை, ஃபிரான்ஸ் நாட்டில் அதன் பயிற்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவரிடம் கூறி, "அப்போஸ்தலிக் மிஷனரி" (Apostolic Missionary) என்ற பட்டத்துடன் அவரை திருப்பி அனுப்பினார்.


மான்ட்ஃபோர்டின் 16 ஆண்டுகால குருத்துவ பணிகள் மற்றும், மெர்வென்ட் குகையிலும் (Cave of Mervent) வனத்தின் அழகுக்கு மத்தியில், மோன்ட்ஃபோர்ட் கிராமத்திற்கு (Village of Montfort) அருகிலுள்ள செயிண்ட் லாசரஸின் துறவற மடத்திலும் (Hermitage of Saint Lazarus), "லா ரோச்செல்"லில் (La Rochelle) உள்ள செயிண்ட் எலோயின் (Hermitage of Saint Eloi) துறவிலும் தனிமையில் சுமார் நான்கு ஆண்டுகாலம் செலவிட்டார்.


கடின உழைப்பு மற்றும் நோயால் சோர்ந்துபோன அவர், இறுதியாக கி.பி. 1716ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், மேற்கு ஃபிரான்ஸ் நாட்டின், செ'யிண்ட்-லாரன்ட்-சுர்-செவ்ரே" (Saint-Laurent-Sur-Sèvre) நகருக்கு வந்தார். அதுவே அவரது கடைசி மறைப்பணியாக அமைந்தது. இதன் போது, நோய்வாய்ப்பட்ட அவர், அதே ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, மரித்தார்.

Comments

Popular posts from this blog