இன்றைய புனிதர் † (ஏப்ரல் 30) ✠ அவதார புனிதர் மேரி ✠ (St. Marie of the Incarnation)

 † இன்றைய புனிதர் †

(ஏப்ரல் 30)



✠ அவதார புனிதர் மேரி ✠

(St. Marie of the Incarnation)


மறைப்பணியாளர், கனடா நாட்டு ஊர்சுலின் சபை நிறுவனர்:

(Missionary, Foundress of the Ursuline Order in Canada)


இயற்பெயர்: மேரி குயார்ட் (Marie Guyart)


பிறப்பு: அக்டோபர் 28, 1599

டூர்ஸ், டூரெய்ன், ஃபிரான்ஸ் இராச்சியம்

(Tours, Touraine, Kingdom of France)


இறப்பு: ஏப்ரல் 30, 1672 (வயது 72)

கியூபெக் சிட்டி, கனடா, நியூ ஃபிரான்ஸ்

(Quebec City, Canada, New France)


ஏற்கும் சமையம்/ சபை:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (கனடா மற்றும் உர்சுலின்ஸ்)

(Roman Catholic Church (Canada and the Ursulines)

கனடா நாட்டின் ஆங்கிலிகன் திருச்சபை

(Anglican Church of Canada)


முக்திப்பேறு பட்டம்: ஜூன் 22, 1980

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)


நியமனம்: ஏப்ரல் 3, 2014

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)


முக்கிய சன்னதி: மையம் மேரி-டி-எல் இன்கார்னேஷன், 10, ரூ டோனகோனா, கியூபெக், கியூபெக், கனடா

(Centre Marie-de-l’Incarnation, 10, Rue Donnacona, Québec, Québec, Canada)


நினைவுத் திருநாள்: ஏப்ரல் 30


அவதார புனிதர் மேரி, ஃபிரென்ச் ஊர்சுலின் சபையின் அருட்சகோதரி (Ursuline nun of the French Order.) ஆவார். ஊர்சுலின் சபையினை நிறுவும் நோக்கில், நியூ ஃபிரான்ஸுக்கு (New France) அனுப்பப்பட்ட கன்னியாஸ்திரிகள் குழுவின் ஒருவரான இவர், நியூ ஃபிரான்ஸில் கத்தோலிக்க மதம் பரவுவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், புதிய உலகில் முதன்முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு. கடவுள்மீது விசுவாசம்கொள்ள, அவர் ஒரு சக்திவாய்ந்த உதாரணமாத் திகழ்ந்தார். அவரது பணி காரணமாக, கத்தோலிக்க திருச்சபை இவரை ஒரு புனிதராக பிரகடனம் செய்தது. கனடாவின் ஆங்கிலிகன் திருச்சபை (Anglican Church of Canada), ஒரு நினைவுத் திருநாளுடன் கொண்டாடுகிறது.


மேரி, கி.பி. 1599ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் பிறந்தார். அவர் சிறு வயதிலிருந்தே மத வாழ்க்கையில் நுழைய விரும்பினார், ஆனால் அவரது குடும்பத்தினர் ஒரு பணக்கார பட்டு வணிகரான கிளாட் மார்ட்டினுடன் (Claude Martin) என்பவருக்கு இவரை திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தனர். திருமணம் முடிந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர்களின் மகன் பிறந்த சில மாதங்களிலேயே, பத்தொன்பது வயதான மேரியை ஒரு விதவையாக்கிவிட்டு அவருடைய கணவர் கிளாட் இறந்தார்.


விதவையான காரணத்தால், சுதந்திரம் பெற்ற மேரி, இப்போது மத வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார். வறுமை, கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் பிரமாணங்களை ஏற்ற இவர், ஒரு அருட்சகோதரியாக வாழ ஆரம்பித்தார். கி.பி. 1627ம் ஆண்டு, ஸ்பானிஷ் புனிதர் அவிலாவின் தெரசாவுடைய சுயசரிதை படித்து, ஆழ்ந்து ஈர்க்கப்பட்டார். மேரி புதிய உலகம் (New World) என்றழைக்கப்படும் நியூ ஃபிரான்ஸ் சென்று, அங்கு கிறிஸ்தவ விசுவாசத்தை பரப்ப விரும்பினார்.


கி.பி. 1631ம் ஆண்டு, தனது இளம் மகனை குடும்ப நண்பர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு, டூர்ஸ் (Tours) நகரில் உள்ள ஊர்சுலின் கான்வென்ட்டில் (Ursuline convent) மேரி சேர்ந்தார். கான்வென்ட்டின் வாயில்களுக்கு வெளியே அவரது இளம் மகன் அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். அவனுடைய நண்பர்களின் சிறிய குழுவினருடன் கான்வென்ட் வாயில்களைத் தாக்க முயன்றான் போன்ற நிகழ்வுகள், மேரியின் இதயத்தைத் துடைத்தெரிந்தன. மேரியும் அவரது மகனும் பிரிவில் மிகுந்த துன்பம் கொண்டார்கள். ஆனால் பின்னாளில், மேரியின் மகன் ஒரு பெனடிக்டைன் துறவியாக (Benedictine monk) மாறியபோதும் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.


கி.பி. 1633ம் ஆண்டு, இவருக்கு அன்னை கன்னி மரியாளின் திருக்காட்சி காணக்கிட்டியது. ஒரு அருட்சகோதரியர்கள் குழுவினருடன் தாம் அன்னை மரியாளுடன் தொலைதூர நிலப்பரப்பில் நடந்து சென்ற திருக்காட்சியை கண்டார். மேலும் அவர் ஒரு மறைப்பணியாளராக நியூ ஃபிரான்ஸுக்குப் பயணிக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாக இதை விளக்கினார். மேரி, நியூ ஃபிரான்ஸின் காலனியான 'கியூபெக்' (Quebec) இயேசுசபை குருக்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். கியூபெக் காலனியில் பூர்வீகப் பெண்களுக்கு மறைப்பணியாற்ற பெண் மறைப்பணியாளர்களை அவர்கள் விரும்பினர்.


மேரியின் குடும்பமும் மத சமூகமும் அவர் அங்கே செல்வதை எதிர்த்தன, ஆனால் மேரி தொடர்ந்து விடாப்பிடியாக இருந்தார். "மேடலின் டி லா பெல்ட்ரி" (Madeleine de la Peltrie) என்ற மறைப்பணி மனப்பான்மை கொண்ட மற்றொரு பணக்கார இளம் பெண்ணை கண்டுபிடித்தார். மேலும் அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி அயராது உழைத்தனர். மேடலின் ஒரு பணக்கார பிரபுவுடன் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. கி.பி. 1639ம் ஆண்டில், மேரி மற்றும் மேடலின் ஆகியோர் கியூபெக்கிற்குப் பயணம் செய்தனர். அவருடன் மேலும் ஐந்து பெண்களும், மற்றும் இரண்டு இயேசுசபை குருக்களும் சென்றனர்.


கி.பி. 1642ம் ஆண்டில் கனடாவின் (Canada) தேசிய வரலாற்று தளமான கியூபெக்கில் மேரி, முதல் ஊர்சுலின் மடாலயத்தை (Ursuline Monastery) நிறுவினார். கியூபெக்கில் ஃபிரெஞ்சு மற்றும் பூர்வீக கனடிய பெண்கள் அனைவருக்கும் கல்வி கற்பிப்பதற்காக மேரி தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். மேரி ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். தனது வாழ்நாளில் 20,000 க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். கடவுளின் ஏற்பாட்டில் நம்பிக்கை வைத்து அவர் சக்திவாய்ந்த முறையில் எழுதினார். அது அவருடைய சொந்த வாழ்க்கையில் இதுபோன்ற சக்திவாய்ந்த நன்மைகளைச் செய்தது:


"நம் ஒவ்வொருவருக்குமான வடிவமைப்புகளிலும் கடவுளிடம் இருக்கும் எல்லா நன்மைகளையும் கருணையையும் ஒரே பார்வையுடன் நாம் பார்க்க முடிந்தால், அவமானங்கள், வலிகள், இன்னல்கள், மற்றும் துன்பங்கள் என்று நாம் அழைப்பவற்றைக்கூட, தெய்வீக விருப்பத்தின் கரங்களில் ஒப்படைத்தால், அவை நம்முடைய மகிழ்ச்சியாக மாறும்."


கி.பி. 1672ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று, மேரி இறந்தார். 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 2ம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், மேரியை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார். கியூபெக் பாராளுமன்றத்தின் முன் மேரியின் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


கடவுளின் திட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தைரியமான மறைப்பணியாளரான அவதாரத்தின் புனித மேரி, எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்! ஆமென்!

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு