† இன்றைய புனிதர் †

(ஜூன் 29)




✠ புனிதர் பேதுரு ✠

(St. Peter) 


திருத்தூதர், கத்தோலிக்க திருச்சபையின் முதல் திருத்தந்தை, மதத்தலைவர், மறைசாட்சி:

(Apostle, First Pope of Catholic Church, Patriarch, and Martyr)


பிறப்பு: கி. பி. 1

பெத்சாய்தா, கௌலனிடிஸ், சிரியா, ரோம பேரரசு

(Bethsaida, Gaulanitis, Syria, Roman Empire)


இறப்பு: கி.பி. 64 மற்றும் 68 ஆகிய வருடங்களுக்கு இடையில்

கிளமன்டைன் சிற்றாலயம், வாட்டிகன் குன்று, ரோம், இத்தாலியா, ரோம பேரரசு

(Clementine Chapel, Vatican Hill, Rome, Italia, Roman Empire)


ஏற்கும் சமயம்:

அனைத்து கிறிஸ்தவ பிரிவுகள் மற்றும் இஸ்லாம்

(All Christian denominations that venerate Saints, Islam)


முக்கிய திருத்தலங்கள்: 

புனித பேதுரு பேராலயம், வாட்டிக்கன் நகர்

(St. Peter’s Basilica, Vatican)


நினைவுத் திருவிழா: ஜூன் 29 


பாதுகாவல்:

ரொட்டி சுடுபவர் (Bakers); பாலம் கட்டும் தொழிலாளி (Bridge Builders); மாமிசம் விற்பவர்கள் (Butchers); மீனவர்கள் (Fishermen); அறுவடை செய்பவர்கள் (Harvesters); புதிய காலணிகள் தயாரிப்பவர்கள் (Cordwainers); கடிகாரம் உற்பத்தியாளர்கள் (Horologists); பூட்டு தொழிலாளிகள் (Locksmiths); காலணிகள் செய்யும் தொழிலாளி (Cobblers); வலை தயாரிப்பாளர்கள் (Net makers); (Shipwrights); எழுதுபொருட்கள் வியாபாரி (Stationers); மூளைக்கோளாறு (Frenzy); கால் பிரச்சினைகள் (Foot problems); ஜூரம் (Fever); நீண்ட ஆயுள் (Longevity);


புனிதர் பேதுரு அல்லது புனிதர் இராயப்பர் (Saint Peter), இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (Twelve Apostles of Jesus Christ) தலைமையானவர் ஆவார். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார். இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும்.


பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். 


கிறிஸ்தவ பாரம்பரியபடி, பேரரசன் “நீரோ அகஸ்டஸ் சீசர்” (Nero Augustus Caesar) ஆட்சிக் காலத்தில், இவர் ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டதைப் போன்றே தாமும் சிலுவையில் அறையப்பட தகுதியற்றவர் என எண்ணியதால், தம்மை தலைகீழாக சிலுவையில் அறையுமாறு இவரே வேண்டிக்கொண்டதாக கிறிஸ்தவ பாரம்பரியம் கூறுகிறது.


தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.


புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு :

பேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்திகளிலும் (Canonical Gospels), திருத்தூதர் பணி நூலிலும் (Acts of the Apostles) உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு கலிலேயக் கடலருகில் கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் “ஜான் அல்லது ஜோனா” (John or Jonah) ஆகும். எனவே அவர் "ஜோனாவின் மகன் சீமோன்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.


பேதுரு என்னும் சொல் “அரமேய” (Aramaic) மொழியில் "கேபா" (Kepha) என வரும். அதன் பொருள் "பாறை" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் "Petra" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு "Petrus" (ஆங்கிலத்தில் “பீட்டர்” Peter) எனும் பெயர் வந்தது.


பேதுருவை இயேசு "பாறை" என்று அழைத்ததற்கான விளக்கத்தை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.


மத்தேயு 16:13-19


இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.


சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். 


பேதுருவின் குடும்பம் :

பேதுருவின் குடும்பம் பற்றிய சில தகவல்கள் நற்செய்திகளில் உள்ளன. அவர் கப்பர்நாகும் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்றும், திருமணமானவர் என்றும் அவருடைய மாமியார் காய்ச்சலாய் இருந்தபோது இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்று அப்பெண்மணிக்கு நலமளித்தார் என்றும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.


மாற்கு 1:29-31


பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.


இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். 


பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு:

பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் சீமோன் என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: திருத்தூதர் பணிகள் 15:14; 2 பேதுரு 1:1).


இயேசு பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" (பண்டைக் கிரேக்கம்: Kephas) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை புதிய ஏற்பாட்டு நூல்களில் அழைக்கப்படுகிறார். யோவான் நற்செய்தி ஒருமுறையும் தூய பவுல் எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.


"கேபா" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் “Petros” என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் "பேதுரு" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. "சீமோன் பேதுரு" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.


கிரேக்க மொழி பேசிய கிறிஸ்தவர் நடுவே "பேதுரு" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும். 


பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள் :

இயேசுவின் திருத்தூதராகிய பேதுரு முதல் "திருத்தந்தை" (Pope) என்று கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன :


✯ இயேசு தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட "திருத்தூதர்கள்" (Apostles) பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;


✯ இயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;


✯ பன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.


பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம். :


✯ இயேசு தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).


✯ இயேசு திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).


✯ லூக்கா மற்றும் பவுல் தரும் தகவல்படி, உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 16:7).


✯ எல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் திருத்தூதர் பேதுரு’தான்.


✯ இயேசு பேதுருவிடம்’தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.


✯ பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத்’தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16


✯ பண்டைய இஸ்ரயேல் நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு எருசலேம் கிறிஸ்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார் என்பதைக் குறிக்க, தூய பவுல் பேதுருவை அச்சபையின் "தூண்" என்று அழைக்கின்றார். (காண்க: கலாத்தியர் 2:9).

Comments

Popular posts from this blog

Saint of the Day † (May 15) ✠ St. Sophia of Rome