† இன்றைய புனிதர் †

(அக்டோபர் 1)



✠ லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா ✠

(St. Thérèse of Lisieux)


கன்னியர் /மறைவல்லுநர்:

(Virgin/ Doctor of the Church)


பிறப்பு: ஜனவரி 2, 1873

அலேன்கான், ஒர்ன், ஃபிரான்ஸ்

(Alençon, Orne, France)


இறப்பு: செப்டம்பர் 30, 1897 (வயது 24)

லிசியே, கல்வடாஸ், ஃபிரான்ஸ்

(Lisieux, Calvados, France)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 29, 1923

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்

(Pope Pius XI)


புனிதர் பட்டம்: மே 17, 1925

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்

(Pope Pius XI)


முக்கிய திருத்தலங்கள்: 

தூய தெரேசா பேராலயம், லிசியே நகர், ஃபிரான்ஸ்

(Basilica of St. Thérèse in Lisieux, France)


நினைவுத் திருவிழா: அக்டோபர் 1


சித்தரிக்கப்படும் வகை: கர்மலைட் துறவியர் சீருடைகள் (Carmelite habit), சிலுவையில் அறையப்பட்ட இயேசு (Crucifix), ரோஜாக்கள் (Roses)


பாதுகாவல்: 

வாட்டிகன் நகர தோட்டங்கள், மறைப்பணியாளர்கள்; ஃபிரான்ஸ்; ரஷியா; எய்ட்ஸ் நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; பெற்றோரை இழந்தோர்; காச நோயாளிகள்


குறிப்பிடத்தகுந்த படைப்புகள்: 

ஓர் ஆன்மாவின் வரலாறு (The Story of a Soul) (சுயசரித நூல்)


லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா, ஒரு ஃபிரெஞ்ச் கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்.


“மரி-ஃப்ரான்காய்ஸ்-தெரேஸ் மார்ட்டின்” (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், துறவற சபையில் “குழந்தை இயேசு”, மற்றும் “இயேசுவின் திருமுகத்தின் தெரேசா” (Thérèse of the Child Jesus and the Holy Face) என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். “குழந்தை இயேசுவின் தெரேசா” (Thérèse of the Child Jesus) என்னும் பெயரும், “இயேசுவின் சிறு மலர்” (The Little Flower of Jesus) என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.


15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, கி.பி. 1888ம் ஆண்டு, பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (Cloistered) கார்மேல் சபை மடம் ஃபிரான்ஸ் நாட்டில் “நோர்மாண்டி” (Normandy) மாநிலத்தில் லிசியேக்ஸ் (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர், (Sacristan), பயிற்சி நிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர், தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தமது 24ம் வயதில் இறையடி எய்தினார்.


இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் சுயசரித நூலை (The Story of a Soul) இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முக்திபேறு பெற்ற பட்டம் 1923ம் ஆண்டிலும், புனிதர் பட்டம் 1925ம் ஆண்டிலும் வழங்கப்பட்டது. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.


குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.


தெரேசா ஒரு மறைவான வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் சுயசரித நூல் (The Story of a Soul) இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்'னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.


இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.


புதியதொரு "சிறு வழியில்" ("Little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (Elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.


லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், ஃபிரான்ஸ் நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.


பிறப்பு:

தெரசா ஃபிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873ம் ஆண்டு ஜனவரி மாதம், 2ம் நாள் புனிதர் லூயிஸ் (Saint Louis Martin) – புனிதர் செலின் (Saint Marie-Azélie Guérin) தம்பதியரின் 9வது குழந்தையாக பிறந்தார். சிறுவயதிலேயே தமது தாயை இழந்தார். 15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருத்தந்தையின் சிறப்பு அனுமதி பெற்று, 1888ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.


சிறு வழியைக் கண்டுபிடித்தல்:

தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894ல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.


படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது:

“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது.”

என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.


அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது:


இதோ அப்பகுதி:

“ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.”


கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.


இதையே அவர் "சிறு வழி" என்று அழைத்தார். 1895 ஃபெப்ரவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.


தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.


"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்து விடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்த பிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்பு செய்வதில் குறைபடுவதில்லை."


சுயசரித நூல் (The Story of a Soul) – ஓர் ஆன்மாவின் வரலாறு:

தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் சுயசரித நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு (The Story of a Soul) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985ல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986ல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.


இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998ம் ஆண்டு வெளியிடப்பட்டது.


இறப்பு:

தெரசா இறக்கும் தருவாயில் இருந்தபோதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை. அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு, 1897ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30ம் நாள் தமது 24 வயதில் இறையடி எய்தினார். 


இவருக்கு, திருத்தந்தை “பதினொன்றாம் பயஸால்” (Pope Pius XI) 1923ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 29ம் நாள் முக்திபேறு பட்டமும், 1925ம் ஆண்டு, மே மாதம், 17ம் நாள் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. 


இவர், 1927ம் ஆண்டு, மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக ஃபிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக “ஜோன் ஆஃப் ஆர்க்” (Joan of Arc) உடன் அறிவிக்கப்பட்டார். 1997ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை புனிதர் “இரண்டாம் ஜான் பவுல்” (Pope Saint John Paul II) இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33ம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், நான்கு பெண் புனிதர்களுள் ஒருவருமாவார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு