† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 29)
✠ புனிதர் கபிரியேல் ✠
(St. Gabriel)
அதிதூதர்:
(Archangel)
ஏற்கும் சமயம்:
கிறிஸ்தவம்
(Christianity)
யூதம்
(Judaism)
இஸ்லாம்
(Islam)
கபிரியேல், ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.
கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழு பேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான்.
கிறிஸ்தவ நம்பிக்கைகள்:
இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.
தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர்.
இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தி, இன்று திருச்சபையில் மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய நம்பிக்கைகள்:
இஸ்லாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது.
இவர், இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது.
இஸ்லாமிய நம்பிக்கையில், இவர்தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது.
மேலும், புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
பிற நம்பிக்கைகள் :
சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
Comments
Post a Comment