† இன்றைய புனிதர் †
(நவம்பர் 20)
✠ வலோய்ஸ் நகர புனிதர் ஃபெலிக்ஸ் ✠
(St. Felix of Valois)
ஒப்புரவாளர்:
(Confessor)
பிறப்பு: ஏப்ரல் 16, 1127
வலோய்ஸ், ஃபிரான்ஸ்
(Valois, France)
இறப்பு: நவம்பர் 4, 1212 (வயது 85)
செர்ஃப்ராய்ட் துறவு மடம், ப்ரூமெட்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ்
(Monastery of Cerfroid, Brumetz, Picardy, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
புனிதர் பட்டம்: மே 1, 1262
திருத்தந்தை நான்காம் அர்பன்
(Pope Urban IV)
முக்கிய திருத்தலம்:
செர்ஃப்ராய்ட் துறவு மடம், ப்ரூமெட்ஸ், அய்ஸ்ன், ஃபிரான்ஸ்
(Monastery of Cerfroid, Brumetz, Department of Aisne, France)
நினைவுத் திருநாள்: நவம்பர் 20
ஒரு கத்தோலிக்க துறவியான புனிதர் ஃபெலிக்ஸ், கத்தோலிக்க குருவும், புனிதருமான “மாதா'வின் ஜான்” (Saint John of Matha) என்பவருடன் இணைந்து “மகா பரிசுத்த திரித்துவ சபை” (Order of the Most Holy Trinity) எனும் கைதிகளின் மீட்புக்கான ஆன்மீக சபையை நிறுவியவர் ஆவார்.
மிகவும் மதிப்புமிக்க பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்த ஃபெலிக்ஸ், தனது கல்வியை முடித்தபிறகு குருத்துவம் பெற்றார். சிறுவயதிலே உலக செல்வங்களைத் துறந்து காட்டிற்கு சென்று செபத்திலும் தவத்திலும் அமைதியாக தனிவாழ்வு நடத்தி வந்தார்.
குருவான பிறகு தனிமையாக வாழ்ந்து கடுமையான ஏழ்மையை கடைபிடித்தார். இவர் காட்டில் வாழும் துறவிகளை போல, அனைத்தையும் துறந்து வாழ வேண்டுமென்பதை விரும்பினார்.
சிறிது காலத்தின் பிறகு, ஃபிரான்ஸின் தென்கிழக்கு பிராந்தியமான “ப்ரொவென்ஸ்” (Provence) பகுதியைச் சேர்ந்த இளம் பிரபுவும், தெய்வீக முனைவரும் (Doctor of divinity), பிற்காலத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற்றவரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதருமான "மாதாவி'ன் ஜான்" (St. John of Matha) கைதிகளின் மீட்புக்காக ஒரு சபையை ஆரம்பிக்க வேண்டி ஃபெலிக்சின் வழிகாட்டுதலை வேண்டி அவரை சந்தித்தார். அப்போது, எழுபது வயதான நிலையிலும் ஃபெலிக்ஸ் தயங்காமல் அதற்கு சம்மதித்தார்.
கி.பி. 1198ம் ஆண்டு, ஜனவரி மாதம், அடர் குளிர் காலத்தில் ரோம் நகர் சென்றடைந்த இவர்கள் இருவரும் அப்போதைய திருத்தந்தை “மூன்றாம் இன்னொசன்ட்” (Pope Innocent III) அவர்களால் வரவேற்கப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பாரிஸ் ஆயரின் பரிந்துரை கடிதங்களை அவர்களிடம் கையளித்தனர். "கைதிகளின் மீட்புக்கான தூய திரித்துவ சபை" (Order of the Holy Trinity for the Redemption of Captives) என்ற பெயரில் சபையினைத் தொடங்க திருத்தந்தை அனுமதி அளித்தார்.
சபையின் தலைவராக “மாதாவின் ஜானை” நியமித்த திருத்தந்தை அவர்கள், சபைக்கான சட்ட திட்டங்களை வகுக்கும் அதிகாரங்களை பாரிஸ் நகர ஆயரிடமும், புனித விக்டர் மடாலயத்தின் (Abbot of St. Victor) மடாதிபதியிடமும் அளித்தார். பிற்காலத்தில், அவர்கள் வகுத்த சட்ட திட்டங்கள் திருத்தந்தையின் ஒப்புதலும் பெற்றன. சபையை நிறுவுவதற்காக பாரிஸ் திரும்பிய ஃபெலிக்ஸ் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார். ஃபிரான்ஸ் மன்னர் “பிலிப் அகஸ்டஸ்” (King Philip Augustus) சபையை ஃபிரான்ஸ் நாட்டில் அங்கீகரித்தார். அதனை வளர்க்கவும் உதவி செய்தார்.
நாற்பது வருடங்களுக்குள்ளேயே அச்சபை ஐரோப்பாவின் மூலைமுடுக்கெல்லாம் அருநூறுக்கும் மேற்பட்ட துறவு மடங்களுடன் பல்கிப்பெருகியது.
புனிதர் ஃபெலிக்ஸ், தமது தாய் இல்லம் அமைந்திருந்த “செல்ஃப்ராய்டில்” (Cerfroid), தமது சக திரித்துவ துறவியரின் மத்தியில் கி.பி. 1212ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4ம் தேதியன்று மரித்தார்.
Comments
Post a Comment