† இன்றைய புனிதர் †

(நவம்பர் 23)



✠ புனிதர் முதலாம் கிளமெண்ட் ✠

(St. Clement I)


நான்காம் திருத்தந்தை:

(4th Pope)


ஏற்கும் சமயம்/ சபைகள்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

ஆங்கிலிகன் சமூகம்

(Anglican Communion)


பிறப்பு: கி.பி. 35

ரோம், ரோமப் பேரரசு

(Rome, Roman Empire)


இறப்பு: மரபுப்படி கி.பி. 99 அல்லது 101

கெர்சொனேசஸ், டாவுரிக்கா, போஸ்போரன் அரசு (இன்றைய கிரிமேயா, உக்ரெய்ன்)

(Chersonesus, Taurica, Bosporan Kingdom (modern-day Crimea, Ukraine/ Russia)


பாதுகாவல்: கப்பல்படை வீரர்கள் (Mariners)


நினைவுத் திருநாள்: நவம்பர் 23


புனிதர் முதலாம் கிளமெண்ட், கத்தோலிக்க திருச்சபையால் நான்காம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவரை "ரோம் நகர் புனித கிளமெண்ட்" என்று அழைப்பதும் உண்டு. இவர் தொடக்க காலத் திருச்சபையின் தலைசிறந்த இறையியல் வல்லுநராய் இருப்பதால் "முதல் திருத்தூதுத் தந்தை" (Frist Apostolic Father) என்றும் அறியப்படுகிறார்.


முதலாம் கிளமெண்டின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. புனிதர் “பேதுரு” (Saint Peter) இவருக்கு அருட்பொழிவு செய்வித்தார் என்பர். இவர், முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ரோமத் திருச்சபையின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.


தொடக்க காலத் திருச்சபை எழுத்தாளர்கள் பொதுவாக கிளமெண்டைப் புனித பேதுருவுக்குப் பின் மூன்றாம் அல்லது நான்காம் திருத்தந்தையாக வரிசைப்படுத்துகின்றனர். ஆதி கிறிஸ்தவ எழுத்தாளர் “டெர்டுல்லியன்” (Tertullian) கருத்துப்படி, கிளமெண்ட் புனித பேதுருவுக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுபேற்றார். ஆனால் புனிதர் “ஜெரோம்” (Saint Jerome) அவர்களின் கூற்றின்படி, இவர் திருத்தந்தை பேதுருவுக்குப் பின்னர் நான்காம் திருத்தந்தை ஆவார். இக்குழப்பநிலை நிலவுவதற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நூற்றாண்டில் ஆயர் பதவி துல்லியமாக வரையறுக்கப்பட்டு, ஒரு மறைமாவட்டத்துக்கு ஒருவரே ஆயராக இருக்க முடியும் என்ற கருத்து தெளிவாக எழாததுதான்.


திருத்தந்தை முதலாம் கிளமெண்டின் எழுத்துப் படைப்பாக இன்று உள்ளது அவர் கொரிந்தியருக்கு எழுதிய மடல் ஆகும். அது சுமார் கி.பி. 96ல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டைத் தவிர்த்து, தொடக்க காலத்தில் உருவான எழுத்துப் படையல்களுள் இதுவே மிக்க பழமையானது ஆகும். கொரிந்து திருச்சபைத் தலைவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து அவர்களுள் சிலர் பதவி நீக்கப்பட்டனர். இச்சிக்கல் குறித்துத் தீர்ப்பு வழங்குவதாக கிளமெண்டின் மடல் உள்ளது. திருச்சபையில் "ஆயர்கள்" "திருத்தொண்டர்கள்" என்னும் திருப்பணியாளர்கள் திருத்தூதர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆதலால் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்று கிளமெண்ட் எடுத்துக் கூறினார்.


கிளமெண்டின் கடிதம் திருச்சபைகளில் புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் போலவே வாசிக்கப்பட்டது. ஆயர்கள் (மூப்பர்கள்) திருச்சபையில் திருத்தூதர்களிடமிருந்து வரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று வலியுறுத்திய முதல் வல்லுநர் கிளமெண்ட் தான்.


கிளமெண்ட் இரண்டாம் கடிதம் ஒன்றினையும் எழுதினார் என்றொரு மரபு உண்டு. ஆயினும் அண்மைக்கால அறிஞர்கள், அக்கடிதத்தை எழுதியவர் வேறொருவர் என்று கருதுகின்றனர்.


நான்காம் நூற்றாண்டின் அளவில் தொடங்கிய ஒரு மரபின்படி, கிளமெண்ட் பேரரசன் “ட்ரேஜன்” (Emperor Trajan) காலத்தில் தம் கிறிஸ்தவ நம்பிக்கையை முன்னிட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் பிற சிறைக்கைதிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். பின்னர் அவரை ஒரு நங்கூரத்தில் கட்டி கடலில் ஆழ்த்திக் கொன்றுவிட்டார்கள்.


பல கிறிஸ்தவ சபைகள் கிளமெண்டைப் புனிதராகப் போற்றுகின்றன. ரோமன் கத்தோலிக்க திருச்சபை, லூதரன் சபை, மற்றும் ஆங்கிலிக்கன் சபை அவரது விழாவை நவம்பர் 23ஆம் நாளும், கீழை மரபுவழித் திருச்சபைகள் சில நவம்பர் 24, வேறு சில நவம்பர் 25 ஆகிய நாள்களில் கொண்டாடுகின்றன.


புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் "கிளமந்து" என்னும் ஓர் உடனுழைப்பாளர் பற்றிப் பேசுகிறார் (பிலிப்பியர் 4:3). அவர் திருத்தந்தை கிளமெண்டாக இருக்கலாம் என்று கி.பி. 3 மற்றும் நான்காம் நூற்றாண்டு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவர்களுள் ஒரிஜென், யூசேபியஸ், ஜெரோம் போன்றோர் அடங்குவர்.


"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால நூலின்படி, கிளமெண்ட் பேதுருவை அறிந்திருந்தார். கிரேக்க நாட்டில் ட்ரேஜன் மன்னனின் ஆட்சிக்கால மூன்றாம் ஆண்டில் (அதாவது கி.பி. 101ல்) மரித்தார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு