பாஸ்கா காலம் 6-ஆம் வாரம்
மே 9 வியாழன்
முதல் வாசகம்: திருத்துதர் பணிகள் 18: 1-8
நற்செய்தி வாசகம்: யோவான் 16: 16- 20
மகிழ்ச்சியாக வாழ என்ன செய்யலாம்?
இயேசுவின் சில போதனைகள் அவரின் சீடர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. தன் பிரிவை பற்றி இயேசு கூறியதை அவர்கள் அறிந்து கொண்டனர். ஆனால் அவருடைய பிரிவின் பொருள் அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு காணப்பட்டது. எனவேதான் அவர்களின் உள்ளத்தில் குழப்பம், சந்தேகம், கேள்விகள் போன்றவை எழுதுகின்றது. அவர்களின் கேள்விகளைப் புதியதொரு திசைக்கு இட்டுச் செல்கின்றார். ஒரு புதிய போதனையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார். சீடர்களிடத்திலும் உலகத்திலும் அவரின் இறப்பு ஏற்படுத்தும் வித்தியாசமான விளைவைப் பற்றி கூறுகின்றார். சீடர்களிடத்தில் அவரின் இறப்பு துக்கத்தை ஏற்படுத்தினாலும் அது காலப்போக்கில் மகிழ்ச்சியாக மாறும் என்று உறுதிமொழி கொடுக்கின்றார்.
துயரமும் மகிழ்ச்சியும் மனித வாழ்க்கை வட்டத்தில் மாறி மாறி நிகழக்கூடிய எதார்த்தங்கள். சில சமயங்களில் நமது செபத்தின் வழியாக இயேசுவின் நெருக்கமான உடனிருப்பை நாம் உணர்கிறோம். சில நேரங்களில் தவிப்பும் வலியும் நிறைந்த வெறுமையான பாலைவன அனுபவத்தை உணர்கிறோம். ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து நாம் செபத்தில் நிலைத்திருக்கும் போது, மீண்டும் இயேசுவின் உண்மையான உடனிருப்பை நம்மால் ஆழமாக உணர முடிகிறது. இத்தகைய அனுபவங்கள் நம்முடைய நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் நாம் தொடர்ந்து வளர நமக்கு உதவுகின்றன.
பொம்மை வேண்டும் எனச் சிறுமி அடம்பிடித்து கவலையோடு இருந்தாள். தந்தையும் வேறு வழியின்றி பொம்மை வாங்கப் பணத்தை கொடுத்தார். ஆசையோடு கடைக்குச் செல்லும் போது வழியோரம் பார்வையற்ற இரண்டு முதியோர்கள் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை கண்டாள். இரக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள். "பொம்மை வாங்கினாயா? " என அப்பா, கேட்க "இல்லை! அதற்கு பதிலாக மகிழ்ச்சியை வாங்கியுள்ளேன்" என்றாள். பொம்மை வாங்கி இருந்தால் அச்சிறுமிக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சியை விட இந்த இரக்கச் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மகிழ்ச்சி என்பது தூய ஆவியார் அருளும் கனியாகும் ( கலா 5:22). தன்னலத்தோடு நம் தேவைகளை நிறைவேற்றி நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, பிறர்நலத்தோடு சேவை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. தன்னைப் பின்பற்றியதால் தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களுக்குத் துன்பம் காத்திருப்பதை உணர்ந்த இயேசு, முன்கூட்டியே துணிவோடும், மகிழ்ச்சியோடும் அதை எதிர்கொள்ள அறிவுறுத்துகின்றார். துன்பங்கள் சூழ்ந்த போதும், " உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் " என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பிறரன்புச் செயல்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு நமது இறைநம்பிக்கையை அறிக்கையிடுவோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
Comments
Post a Comment