† இன்றைய புனிதர் †

(அக்டோபர் 4)



✠ அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் ✠

(St. Francis of Assisi)


மறைப்பணியாளர்; திருத்தொண்டர்; ஒப்புரவாளர்; அருள் வடுவுற்றவர்; சபை நிறுவனர்:

(Religious, Deacon, Confessor, Stigmatist and Religious Founder)


பிறப்பு: கி.பி. 1181/ 1182

அசிசி, ஸ்போலெடோ, தூய ரோம பேரரசு

(Assisi, Duchy of Spoleto, Holy Roman Empire)


இறப்பு: அக்டோபர் 3, 1226 (வயது 44)

அசிசி, ஊம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Assisi, Umbria, Papal States)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

பழைய கத்தோலிக்க திருச்சபை

(Old Catholic Church)


புனிதர் பட்டம்: ஜூலை 16, 1228

திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி

(Pope Gregory IX)


முக்கிய திருத்தலங்கள்:

அசிசியின் தூய ஃபிரான்சிஸ் பேராலயம்

(Basilica of San Francesco d'Assisi)


நினைவுத் திருவிழா: அக்டோபர் 4


பாதுகாவல்:

விலங்குகள், சுற்றுச்சூழல், இத்தாலி, வியாபாரிகள், சாரணர்கள், 

சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco), கலிஃபோர்னியா (California), 

நாகா சிட்டி (Naga City), செபு (Cebu), ஓவியத்திரை தொழிலாளர்கள்.


அசிசியின் ஃபிரான்சிஸ், ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும், ஃபிரான்சிஸ்கன் சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவரும் ஆவார். அவர் பிறந்த ஆண்டு கி.பி. 1181 அல்லது கி.பி.1182 என்று கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர். திருத்தொண்டராகப் பட்டம் பெற்றபின்னர், “குருத்துவ பட்டம்” பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக, ஃபிரான்சிஸ் அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.


வரலாற்று ஆதாரங்கள்:

புனிதர் அசிசியின் ஃபிரான்சிசின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. கி.பி. 12-13ம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடு பற்றிய எழுத்துப் படையல்கள் போன்றவையும் உள்ளன. ஃபிரான்சிஸ் இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் ஃபிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர். இத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித ஃபிரான்சிஸ் பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. ஃபிரான்சிஸ் வாழ்ந்த கி.பி. 12-13ம் நூற்றாண்டுகளிலும், அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த "அசிசியின் ஏழை மனிதரின்" (Poor Man of Assisi) எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபை தவிர எதிர் திருச்சபைகள் - குறிப்பாக ஆங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய திருச்சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.


இளமைப் பருவம்:

இளைஞராக இருந்தபோது ஃபிரான்சிஸுக்கு ஃபிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த ஃபிரான்சிஸ் உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார். 


கி.பி. 1201ம் ஆண்டில் பெரூஜியா (Perugia) நகருக்கு எதிராகப் போரிடும்படி ஃபிரான்சிஸ் படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் ஃபிரான்சிஸுக்கு ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், கி.பி. 1203ம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய ஃபிரான்சிஸ் மீண்டும் தனது பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பினார். கி.பி. 1205ம் ஆண்டிலும் அவருக்கு ஓர் திருக்காட்சி அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதன்பின், ஃபிரான்சிஸ் தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். இயேசுவைப் பின்பற்றி, ஃபிரான்சிஸும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். ஃபிரான்சிஸ் தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.


துறவற சபைகளை நிறுவுதல்:

கி.பி. 1209ம் ஆண்டு, 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். ஃபிரான்சிஸ், திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை, கி.பி. 1210ம் ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார். பின்னர், ஃபிரான்சிஸ் கி.பி. 1212ம் ஆண்டு, கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், கி.பி. 1221ம் ஆண்டு, மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று "மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.


இறப்பு:

தாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே ஃபிரான்சிஸும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். "உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து கற்பிப்பாராக" என்று கூறினார். ஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் ஃபிரான்சிஸ். அன்று சனிக்கிழமை, கி.பி. 1226ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 3ம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் ஃபிரான்சிஸ் அக்டோபர் மாதம், 4ம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது ஃபிரான்சிஸுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ம் ஆண்டு. அந்த நாளில் ஃபிரான்சிஸ் மரித்தார். இன்று, அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு